தமிழகம் முழுவதும் கோயில்களை திறக்க வலியுறுத்தி இந்து முன்னணி சார்பில் கோயில்கள் முன் போராட்டம் நடத்தப்பட்டது.
திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில், பாளையங்கோட்டை சிவன் கோயில், கோபாலசாமி கோயில், ராமர் கோயில், முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்கள் முன் இந்து முன்னணியினர் கற்பூரம் ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையப்பர் கோயில் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு இந்து முன்னணி மாநில செயலாளர் கா.குற்றாலநாதன் தலைமை வகித்தார். ஏபிவிபி தேசிய செயலாளர் முத்துராமலிங்கம், பாஜக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் பாலாஜி கிருஷ்ணசுவாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
தென்காசி, காசி விஸ்வநாதர் கோயில் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட இந்து முன்னணி செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன், நகர துணைத் தலைவர் சேகர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
தூத்துக்குடியில் சிவன் கோயில், வேம்படி இசக்கியம்மன் கோயில், மட்டக்கடை உச்சிமாகாளி அம்மன் கோயில், தெப்பக்குளம் மாரியம்மன் கோயில், ரயில்வே பத்திரகாளியம்மன் கோயில் அருகில் இந்து முன்னணி சார்பில் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து போராட்டம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் இசக்கிமுத்துகுமார் தலைமை வகித்தார். புதுக்கோட்டை ஒன்றிய பொறுப்பாளர் சுந்தரி, ஓட்டப்பிடாரம் பொறுப்பாளர் ராகவேந்திரா, தூத்துக்குடி கிழக்கு மண்டல பொறுப்பாளர் சிவலிங்கம் கலந்து கொண்டனர். தெய்வங்களின் வேடம் அணிந்து நிர்வாகிகள் பங்கேற்றனர். புதுக்கோட்டையில் கோயிலை திறக்க வலியுறுத்தி, பொதுமக்கள் தங்களது வீடுகள் முன் கோலம் வரைந்திருந்தனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்பாள் கோயில் முன்பு நகரத் தலைவர் சீனிவாசன் தலைமையில் நகர பொதுச் செயலாளர் சுதாகரன் உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் கோயில்களின் வாயிலில் கற்பூரம் ஏற்றி போராட்டம் நடைபெற்றது. வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோயில் முன்பு மாவட்ட பாஜக பொருளாளர் முத்துராமன், அமைப்பாளர் நாஞ்சில் ராஜா மற்றும் பக்தர்கள் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago