நடப்புக் கல்வியாண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கிய திருப்பத்தூர் ஆட்சியர் அமர் குஷ்வாஹா, மாணவிகளுக்கு கணித பாடம் நடத்தி சிறிது நேரம் ஆசிரியராக மாறினார்.
2021-2022-ம் கல்வி ஆண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்கள் பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் மீனாட்சி அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்றார். திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்ஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, நடப்பாண்டுக்கான விலையில்லா பாடப் புத்தகங்களை வழங்கி பேசும்போது, "கரோனா முன்னெச்சரிக்கை மற்றும் அரசின் நிலையான வழிகாட்டுதல் அடிப்படையில் விலையில்லா பாடப் புத்தகங்கள் மாணவ, மாணவிகளுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருப்பத்தூர் வருவாய் மாவட்டத்தில் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி என மொத்தம் 799 பள்ளிகள் உள்ளன.
இப்பள்ளிகளைச் சேர்ந்த 1 லட்சத்து 27 ஆயிரத்து 138 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் இன்று (நேற்று) முதல் விநியோகம் செய்யப்படவுள்ளன.
சமூக இடைவெளியை பின்பற்றி ஒரு நாளைக்கு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளியில் 50 முதல் 60 மாணவர்களுக்கும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் ஒரு நாளைக்கு 200 மாணவர்கள் வீதம் விலையில்லா பாடப் புத்த கங்களை வழங்க வேண்டும்.
பள்ளிகள் திறப்பு குறித்துஅரசு இதுவரை அறிவிப்பும் வெளியிடவில்லை. இருந்தா லும், அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப் பட வேண்டும். குடிநீர், கழிப்பறை, இருக்கைகள், சுற்றுச்சுவர், வகுப்பறைகள், பள்ளிக்கட்டிடம் என அனைத்தையும் ஆசிரியர்கள் கண்காணித்து அதன் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்துக்கொள்ள வேண்டும். மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு உள்ளிட்டவைகளை பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்க்க வேண்டும்’’என்றார்.
இதைத்தொடர்ந்து, பாடப் புத்தகங்களை மாணவிகளுக்கு வழங்கிய ஆட்சியர் அமர் குஷ்வாஹா கரும்பலகையில் கணக்கு பாடங்களை எழுதி, அதை மாணவிகளுக்கு எளிதாக புரியும்படி சுமார் அரை மணி நேரத்துக்கு மேலாக பாடங்களை நடத்தி ஆசிரியராக மாறினார்.
அதன் பிறகு ஆசிரியர்களிடம் பேசிய ஆட்சியர் அமர் குஷ்வாஹா, "கடந்த ஓராண்டுக்கும் மேலாக நேரடி வகுப்புகள் இல்லாததால் மாணவிகள் சோர்வடைந்துள்ளனர். எனவே, ஆன்லைன் வகுப்பாகஇருந்தாலும், கல்வி தொலைக் காட்சி மூலம் பாடங்களை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகளுக்கு எளிதாக புரியுமாறு பாடங்களை நடத்த முன்வர வேண்டும்" என்றார்.
இதில், மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை, ஆய்வாளர்கள் தாமோதிரன், தன்ராஜ் மற்றும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago