வேலூரில் நடத்திய திடீர் சோதனையில் - வடமாநில சிரஞ்சி வகை சாக்லெட்டுகள் பறிமுதல் : மொத்த வியாபாரிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

வட மாநிலங்களில் தயாரிக்கப்பட்டு வேலூரில் விற்பனை செய்யப்பட்ட குழந்தைகளுக்கு ஆபத்தான சிரஞ்சி வகை சாக்லெட்டுகளை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் குழுவினர் சோதனை செய்து பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சத்துவாச்சாரி பகுதியில் உள்ள கடைகளில் சிரஞ்சிகளில் அடைக்கப்பட்ட சாக்லெட் விற்பனை நடைபெறுவதாக தகவல் வெளியானது. மேலும், மருத்துவ மனை கழிவுகளில் இருந்து சேகரிக்கப்பட்ட சிரஞ்சிகளை பயன்படுத்தி சாக்லெட் விற்பனை நடைபெறுவதாக புகார் எழுந்தது.

இந்த தகவலறிந்த வேலூர் மாநகராட்சி நல அலுவலர் மருத்துவர் சித்ரசேனா, வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தின்பண்ட கடைகளில் சோதனை யில் ஈடுபட்டனர்.

அப்போது, காகிதப்பட்டறை நைனியப்பன் தெருவில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் இருந்து 10 எண்ணிக்கையிலான சிரஞ்சி வகை சாக்லெட்டுகளை பறிமுதல் செய்தனர். இந்த வகை சாக்லெட்டுகள் எங்கே வாங்கப்பட்டது என கடையின் உரிமை யாளரிடம் விசாரிக்கப்பட்டது. தொடர்ந்து, வேலூர் மார்க்கெட் பகுதியில் உள்ள தின்பண்ட மொத்த வியாபாரிகளின் கடைகள் அமைந்துள்ள சுண்ணாம்புக்கார தெருவில் சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின்போது சிரஞ்சி வகை சாக்லெட்டுகள் எங்கும் கிடைக்கவில்லை. அங்குள்ள மொத்த வியாபாரி களிடம் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு வட இந்தியாவில் இருந்து விற்பனைக்காக வந்திருந்த சாக்லெட்டுகள் அது என்றும், தற்போது விற்பனையில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, எந்தவித தயாரிப்பு குறித்த தகவலும் இல்லாத சிரஞ்சி வகை சாக்லெட்டுகளை விற்பனை செய்யக்கூடாது என வியாபாரிகளை எச்சரித்தனர்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் செந்தில் குமார் கூறும்போது, ‘‘சிரஞ்சிகளில் அடைக்கப்பட்ட சாக்லெட் விற்பனை குறித்த தகவலின்பேரில் மார்க்கெட்டில் சோதனை நடத்தப் பட்டது.

இதில், ஒரு பெட்டிக்கடையில் இருந்து விற்பனை ஆகாத சிரஞ்சி சாக்லெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சாக்லெட்டுகள் இரண்டு மாதங் களுக்கு முன்பு விற்பனைக்காக வாங்கி வந்துள்ளனர். இந்த வகை சாக்லெட்டுகள் வேலூரில் எங்கும் தயாரிக்கவில்லை. வட இந்தியாவில் இருந்து விற் பனைக்காக வந்துள்ளன.

சாக்லெட்டுகள் அடைத்து வைத்திருந்த சிரஞ்சிகள் உண்மை யானது கிடையாது. அது எந்த மருத்துவக் கழிவும் இல்லை. சாக்லெட் விற்பனைக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட அந்த சிரஞ்சியில் மருந்துகளை அளவிடும் அடையாள குறியீடு எதுவும் இல்லை. மேலும், ஊசி பொருத்தும் முனையும் இல்லை. சிரஞ்சி சாக்லெட்டுகளை விற் பனைக்கு கொண்டு வரக் கூடாது என வியாபாரிகளை எச்சரித்துள்ளோம்’’ என தெரிவித்தார்.

சோதனை தொடருமா?

வேலூர் சுண்ணாம்புக்கார தெருவில் உள்ள சில வியாபாரி கள் வட மாநிலங்களில் தயாரிக் கப்படும் சிறுவர்களுக்கான தின்பண்டங்களை அதிகளவில் இறக்குமதி செய்து விற்பனை செய்து வருகின்றனர். அதிகாரிகள் குழுவினர் தொடர்ந்து ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக் கையும் எழுந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்