கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தேவையின்றி வாகனங்களில் வெளியே வருவோருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்ட பகுதிகளில் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
இதுபோல, வீடு வீடாகச் சென்று சளி, காய்ச்சல் உள்ளதா எனவும் உள்ளாட்சி அமைப்பினர் மூலம் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தொடர் நடவடிக்கையால், தொற்றுபரவல் படிப்படியாக குறையத்தொடங்கியுள்ளது.
தொற்று குறைந்த பகுதியில் இருந்த கட்டுப்பாட்டு மண்டலங்களும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாவட்டம் முழுவதும் 11 கட்டுப்பாட்டு மண்டலங்கள் உள்ளன. இதனிடையே ஊரடங்கில் தளர்வில்லாத போதும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவுக்கு வாகனங்களில் பொதுமக்கள் செல்கின்றனர்.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியே வருவோரை அனுமதிக்கும் போலீஸார் காரணமின்றி வெளியே சுற்றுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தவிர, நடமாடும் கரோனா பரிசோதனை வாகனம் மூலம் கரோனா பரிசோதனையும் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வெளியே தேவையின்றி வரக்கூடாது எனவும் அறிவுறுத்தி அனுப்பி வைக்கின்றனர். ‘‘தொற்று பரவலை தடுக்கவே இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது’’ என காவல்துறையினர் தெரிவித்தனர்.நாமக்கல்லில் தேவையின்றி சாலைகளில் சுற்றுவோருக்கு சுகாதாரத்துறை உதவியுடன் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். சேலம் சாலை சந்திப்பில் தேவையின்றி வெளியே வந்தோருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago