சிபிஎஸ்இ-யை போன்று தமிழகத்திலும் பிளஸ் 2 விருப்பத் தேர்வு நடத்த பெற்றோர், மாணவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
கரோனா 2-வது அலையால் தொற்று பாதிப்பு அதிகமாக இருந்ததால், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து மதிப்பெண்கள் வழங்குவதற்காக அமைக்கப்பட்ட குழு பரிந்துரைப்படி பிளஸ் 2 வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40 சதவீதம், 10 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் ‘வழங்கப்படும் மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை எனக் கருதும் மாணவர்களுக்கு விருப்பத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். இத்தேர்வு கரோனா சூழ்நிலைக்கு ஏற்ப ஆக.15 முதல் செப்.15-ம் தேதி வரை நடத்தப்படும் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ் பிளஸ் 2 பொதுத்தேர்வை போன்று தமிழகத்திலும் மாநில பாடத் திட்டத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவதற்காக பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு மதிப்பெண்கள் வழங்குவது தொடர்பாக தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள், பெற்றோரிடம் கருத்து கேட்டு வருகிறது.
இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள், பெற்றோர் சிலர் கூறியதாவது: பிளஸ் 2 மதிப்பெண்கள் நீண்ட காலத்துக்குப் பயன்படும். கடந்த காலங்களில் 10-ம் வகுப்பு, பிளஸ் 1 வகுப்புகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் பலர், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதனால் கடந்த காலத் தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க முடிவு செய்தால், சிபிஎஸ்இ-யை போன்று தமிழகத்திலும் விருப்பத் தேர்வு நடத்த வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago