கரோனா கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக மாற்ற வேண்டும் : அரசு அலுவலர்களுக்கு நாமக்கல் ஆட்சியர் அறிவுறுத்தல்

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:

கரோனா தொற்று தடுப்பு பணிகளுக்காக தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் நாமக்கல் மாவட்டம் தளர்வுகள் அளிக்க முடியாத நோய்த்தொற்று அதிகம் உள்ள மாவட்டங்களில் ஒன்றாகத் தான் உள்ளது. இந்த நிலையை விரைவில் மாற்றி முழுமையாக நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

உள்ளாட்சி நிர்வாகங்கள் தங்கள் பகுதியில் வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி சரியாக நடைபெறுவதை உறுதி செய்வதுடன், சளி, இருமல், காய்ச்சல் உள்ள நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ள உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பொதுமக்கள் அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி நோய்த்தொற்றின் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனை மேற்கொண்டு உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அனைத்துத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து கரோனா தொற்று தடுப்பு பணிகளை குழுவாக மேற்கொண்டு நாமக்கல் மாவட்டத்தை கரோனா இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமா் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE