விழுப்புரம் நகராட்சியில் முறை கேடு நடந்துள்ளதாக வந்த புகார் தொடர்பாக நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் நேற்று விசாரணை நடத்தினார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் அகமது, தமிழக முதல்வர் மற்றும் நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அண்மையில் புகார் மனு அனுப்பியிருந்தார். அம்மனுவில் கூறியிருந்தது:
கடந்த ஆட்சியில் விழுப்புரம் நகராட்சியில் அரசு விதிமுறைகளை மீறி ஓப்பன் டெண்டர் நடத்தாமல், ரகசியமான முறையில் டெண்டரை முடித்து முறைகேட்டில் ஈடுபட்டனர். விழுப்புரம் பழைய பேருந்து நிலைய வளாகத்தில் ரூ.10 லட்சத்திற்கு மேல்மதிப்புள்ள பணிகளை ஆப்லைனில் நடத்தக் கூடாது என்ற அரசு வழிகாட்டுதலை மீறி வேண்டியவர்களுக்கு டெண்டர் அளித்துள்ளனர். நகராட்சியில் தனியார்நிறுவனத்தின் மூலம் நடைபெறும்குப்பை அகற்றும் பணிகள் குறித்து பொதுமக்கள் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. விழுப்புரம் நகராட்சியின் ஆணையராக தட்சிணாமூர்த்தி பொறுப்பேற்றது முதல் மேற்கொள்ளப்பட்ட திட்டப் பணிகள் மற்றும் முறைகேடு குறித்து முழுமையான விசாரணை நடத்திடவேண்டும்.
விழுப்புரம் நகராட்சியில் பல இடங்களிலும் பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு கொடுக்காமல் சாலைஅமைக்கப்பட்டது. பின்னர், பாதாள சாக்கடை இணைப்புக்காக பள்ளம் தோண்டியதால் ரூ.50 கோடிக்கும் மேல் நகராட்சிக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகத்தின் அலட்சியப்போக்கினால் ஏற்பட்டுள்ள நிதிஇழப்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த புகார் மனு தொடர்பாக விசாரணை நடத்த தமிழகஅரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, விசாரணை அலுவலராக நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குநர் விஜயகுமார் நியமிக்கப்பட்டார். அவர் நேற்று நகராட்சிஅலுவலகத்தில் ஆணையர் தட்சிணாமூர்த்தியிடம் 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினார். பணிகள் மேற்கொள்ளப்பட்ட விவரங்கள் தொடர்பாக பொறியாளர் மற்றும் கணக்குப்பரிவு அலுவலர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து, புகார்தாரரான ஒப்பந்ததாரர் அகமதுவிடம், ஒப்புதல் வாக்குமூலத்தினையும் மண்டல இயக்குநர் பெற்றுக்கொண்டார்.
இதுகுறித்து நகராட்சி நிர்வாக வேலூர் மண்டல இயக்குநர் விஜயகுமாரை கேட்டபோது, “ நகராட்சி ஆணையர் தட்சணா மூர்த்தி,புகார் தெரிவித்த அகமது ஆகியோரிடம் வாக்கு மூலம் பெறப்பட்டுள்ளது. இந்த விவரங்கள் அரசுக்கு அனுப்பி வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago