கரோனா மூன்றாம் அலையை எதிர்கொள்ள - குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க : பொது மருத்துவர்களுக்கு பயிற்சி : சிறப்பு வார்டுகள் அமைக்க ஏற்பாடு தீவிரம்

இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை அடுத்த 6 முதல் 8 வாரங்களில் தொடங்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா மூன்றாம் அலை யில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என கூறப் படுவதால் சிகிச்சை அளிக்க தயாராக இருக்குமாறு அறிவுறுத் தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், அரசு மருத்துவமனைகளில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்கள் எந்த நேரமும் தயார் நிலையில் இருக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்காக, அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தபட்சம் 100 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும் இதில், 25 படுக்கைகள் ஐசியு வசதி கொண்டதாக இருக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். மேலும், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் உள்ள குழந்தைகள் நல சிகிச்சை வார்டுகளை சிறப்பு கரோனா பராமரிப்பு மையமாக மாற்றவும் உள்ளனர்.

அதன்படி, வேலூர் அடுக்கம் பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள குழந்தைகள் வார்டில் குழந்தைகளுக்கான சிறப்பு கரோனா பராமரிப்பு மையத்தில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயாராகி வருகிறது.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் செல்வி கூறும்போது, ‘‘அரசு மருத்துவக் கல்லூரியில் தற்போது 12-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நல மருத்துவர்கள் உள்ளனர். மூன்றாம் அலையை எதிர்கொள்ள இவர்கள் தயாராக இருக்கும் நிலையில் இங்குள்ள பொது மருத்துவர்கள் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க வசதியாக அதுகுறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும், குழந்தைகள் நல மருத்துவர்கள், பொது மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள் அடங்கிய குழுவும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதே போல், 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

இதன் மூலம் தொற்று பரவுவது வீட்டிலேயே தடுக்கப்படும். குழந்தைகளுக்கு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவை இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சேர்க்க வேண்டும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE