2-வது தவணை கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள - வெளிநாடு செல்வோருக்கு சிறப்பு முன்னுரிமை : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

வெளிநாடுகளுக்கு கல்வி பயில செல்வோர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி களில் பங்கேற்போர் 2-வது தவணைகரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள சிறப்பு முன்னுரிமை அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரத்து 363 நபர்களுக்கு முதல் தவணையும், 60 ஆயிரத்து 320 நபர்களுக்கு இரண்டாம் தவணையும் தடுப்பூசிபோடப்பட்டுள்ளது. இதில் கோவிஷீல்டு தடுப்பூசி போடுபவர்களுக்கு முதல் தவணை போட்ட நாளிலிருந்து 84-112 நாட்களுக்குள் இரண்டாம் தவணை தடுப்பூசிபோடலாம் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. இதுபோல் கோவேக்சின் தடுப்பூசியை 28 நாட்களுக்கு பிறகு 2-வது தவணை போட்டுக் கொள்ளவேண்டும்.

இந்த சூழ்நிலையில் வெளிநாடு களுக்கு கல்வி பயில செல்வோர், வேலைவாய்ப்பு பெற்றவர்கள் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்போர் நலனை கருத்தில் கொண்டு இரண்டாவது தவணை கோவிஷீல்டு தடுப்பூசி 28 நாட்கள்முடிந்தவுடன் 84 நாட்களுக்கு முன்னரே தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் வாரியாக குறிப்பிட்ட தடுப்பூசி மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தைச் பொருத்தவரை எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தேர்வு செய்து COWIN இணையதளத்தில் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எனவே வெளிநாடுகளுக்கு செல்ல திட்டமிட்டிருக்கும் மேற் குறிப் பிட்ட 3 பிரிவினரும் உரிய ஆவணங்களை கொடுத்து 2-வதுதவணை கோவிஷீல்டு தடுப்பூசியை ஆகஸ்ட் 31-க்குள் செலுத்திக் கொள்ளலாம்.

இதற்கு வெளிநாட்டு கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அனுமதி கடிதம், வெளிநாட்டில் பணிபுரிவதற்கான அனுமதி கடிதம், ஓலிம்பிக் போட்டியாளர் எனில் அதற்கான அத்தாட்சி இருக்க வேண்டும். மேலும் விவரங்கள் தேவைப்படுவோர் 8098001576 என்ற எண்ணில் எர்ணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொள்ளலாம்.

இதுபோல் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டளை அறையை 1077 என்ற கட்டண மில்லா எண்ணிலும், 04286-281377, 04286-299137, 04286-299139, 82204 02437, 93423 12761 மற்றும் 93423 12596 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு விவரங்களை தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்