பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் ஊராட்சிக்குட் பட்ட விசுவகுடி கிராமத்தில் பகுதிநேர ரேஷன் கடை செயல்பட்டு வருகிறது.
இந்த கடை வாரந்தோறும் வியாழன், சனி, ஞாயிறு ஆகிய கிழமைகளில் மட்டும் செயல்படும். இந்த கடையில் விற்பனையாளராக பணியாற்றி வரும் பூலாம்பாடியைச் சேர்ந்த ரமேஷ்(45), ரேஷன் கடையை சரிவர திறந்து பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை வழங்குவதில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ரேஷன் கடையில் தமிழக அரசு வழங்கிய கரோனா நிவாரண தொகை ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு 150 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டது. எஞ்சிய 250 ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரண தொகை, 14 வகை மளிகை பொருட்களும் நேற்று வரை வழங்கப்படவில்லை.
மேலும், ஞாயிற்றுக்கிழமை யான நேற்று காலை 11 மணி ஆகியும் கடையை திறக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பூட்டியிருந்த ரேஷன் கடைக்கு மேலும் ஒரு பூட்டுப் போட்டு பூட்டி, கடையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த அரும்பாவூர் போலீஸார் மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் அலுவலர்கள் அங்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து, கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago