தி.மலையில் குடும்ப தகராறு காரணமாக - காவல் உதவி ஆய்வாளரின் காருக்கு தீ வைப்பு :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக காவல் உதவி ஆய்வாளரின் கார் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.

தி.மலை மத்தலாங்குளத் தெருவில் வசிப்பவர் சுந்தரம். திருவண்ணாமலை நகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர், குடும்பத்துடன் வீட்டில் நேற்று முன் தினம் இரவு உறங்கிக் கொண்டிருந்தார்.

இந்நிலையில், வீட்டில் உள்ள போர்டிகோவில் நிறுத்தப் பட்டிருந்த கார் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், தீயை அணைக்கும் முயற்சி யில் ஈடுபட்டார். இருப்பினும் பலனில்லை. இது குறித்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அவர்கள் விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர். ஆனாலும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், கார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் ஒன்றும் எரிந்து சேதமடைந்தது.

இது குறித்து உதவி ஆய்வா ளர் சுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் தி.மலை கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், சுந்தரம் வீட்டின் அருகே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது, சுடிதார் அணிந்து முகத்தை துணியால் மூடிக்கொண்டு ஒரு பெண், கையில் பெட்ரோல் கேனுடன் நுழைவதும், பின்னர் கார் மீது பெட்ரோலை ஊற்றி தீக்குச்சியால் அந்த பெண் தீ வைத்துவிட்டு தப்பித்து ஓடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதையடுத்து, அந்த பெண்ணின் அடையாளம் அறிந்த காவல்துறையினர், அவரை பிடித்து வந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம், குடும்பத் தகராறு காரணமாக நடைபெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்