கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்துத் துறைகளின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தலைமை வகித்துப் பேசியதாவது:
அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு வாகனங்களின் பதிவேடுகள் சரியாக உள்ளனவா, அனுமதி பெற்ற வாகனங்கள் தான் இயக்கப்படுகின்றனவா என்பதை ஆய்வு செய்ய வேண்டும்.
கொல்லிமலை பகுதியில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறும் வாய்ப்புகள் உள்ளது. குழந்தைத் திருமணங்கள் நடைபெறுதை தடுக்க தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் ஆகியோர் தங்கள் பகுதியில் தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.
குழந்தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். மீறி செய்தால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மாணவிகள் தங்களுடன் பயின்ற தோழிகளுக்கு குழந்தைத் திருமணம் நடைபெறுவது தெரிந்தால் சைல்டு லைனுக்கு 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரியப்படுத்தவேண்டும். கரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் விவரத்தை கிராம நிர்வாக அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் விசாரணை செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக அனுப்ப வேண்டும். அனைத்துத் துறை அலுவலர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட கரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகளை அர்ப்பணிப்பு உணர்வோடு மேற்கொண்டு 2 வார காலத்திற்குள் கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, கோட்டாட்சியர்கள் மு.கோட்டைக்குமார், தே.இளவரசி ஆகியோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago