பரமத்தி வேலூரில் வாழைத்தார் சந்தை வாரத்தில் 3 நாட்கள் செயல்பட திருச்செங்கோடு கோட்டாட்சியர் அனுமதியளித்துள்ளார். இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் மற்றம் மோகனூர் சுற்றுவட்டாரத்தில் காவிரிப் பாசனத்தை மையப்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் வாழை சாகுபடி செய்யப்படுகிறது. பூவன், மொந்தன் உள்ளிட்ட ரக வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படுகிறன. இங்கு உற்பத்தி செய்யப்படும் வாழை நாள்தோறும் பரமத்தி வேலூரில் கூடும் வாழைத்தார் சந்தைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கிருந்து சேலம், ஈரோடு உள்பட பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கால் வாழைத்தார் சந்தை செயல்பட தடை விதிக்கப்பட்டது. இதனால், அறுவடை செய்யப்பட்ட வாழைப்பழங்களை விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். வாழைத்தார்கள் மரங்களில் பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டது.
எனவே, வாழைத்தார் சந்தையை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாழை விவசாயிகள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதன்பலனாக பரமத்தி வேலூரில் வாழைத்தார் சந்தை வாரத்தில் 3 நாட்கள் செயல்பட திருச்செங்கோடு கோட்டாட்சியர் அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக ராஜவாய்க்கால் பாசன விவசாயிகள் சங்க துணைத் தலைவர் ஓ.பி.குப்புதுரை கூறுகையில், பரமத்தி வேலூரில் வாழை சந்தை திறப்பு தொடர்பாக பரமத்தி வட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்செங்கோடு கோட்டாட்சியர் தே.இளவரசி தலைமையில் கூட்டம் நடந்தது. இதில், திங்கள், புதன், சனி ஆகிய 3 நாட்கள் பரமத்தி வேலூர் பழைய பைபாஸ் சாலை செல்லாண்டியம்மன் கோயில் அருகில் சந்தை செயல்பட அனுமதியளித்தார். முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்ற கரோனா விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கோட்டாட்சியர் அறிவுறுத்தியுள்ளார். சந்தை செயல்பட அனுமதியளித்த மாவட்ட நிர்வாகத்திற்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவிக்கப்படுகிறது, என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago