மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக - ஜல் சக்தி அமைச்சரை சந்திக்க விரைவில் டெல்லி பயணம் : நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தகவல்

By செய்திப்பிரிவு

மேகதாது அணை பிரச்சினை தொடர்பாக ஜல் சக்தி துறை அமைச்சரை சந்தித்துப் பேச விரைவில் டெல்லி செல்ல உள்ள தாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக மோர்தானா அணை உள்ளது. தமிழக-ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே 11.50 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள அணையில் 261.36 மில்லியன் கன அடிக்கு தண்ணீரை தேக்கி வைக்க முடியும். தற்போது, அணையில் 11.40 மீட்டர் உயரத்துக்கு 258.369 மில்லியன் கன அடிக்கு நீர் இருப்பு உள்ளது. இதில், பயன்படுத்த இயலாத தண்ணீர் இருப்பு 31.225 மில்லியன் கன அடி போக மீதமுள்ள 227.144 மில்லியன் கன அடி நீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தில் விவசாயி களுக்கான பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காகவும் நிலத்தடி நீராதாரத்தை உயர்த்தும் வகையில் அணையில் இருந்து நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் நடை பெற்ற நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர்ஆனந்த், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), கார்த்திகேயன் (வேலூர்), வில்வநாதன் (ஆம்பூர்), அமலு விஜயன் (குடியாத்தம்) உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

10 நாட்கள் தண்ணீர் திறப்பு

மோர்தானா அணையில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஜிட்டப்பள்ளி அருகே உள்ள பிக் -அப் அணை பகுதியில் உள்ள வலதுபுற கால்வாய் வழியாக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுவதால், 12 ஏரிகளுடன் 25 கிராமங்களில் உள்ள சுமார் 3,935 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இடதுபுற கால்வாய் வழியாக விநாடிக்கு 75 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு 7 ஏரிகளுக்கும் 19 கிராமங்களில் சுமார் 4,227 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பொது கால்வாயில் ஆற்றில் நேரடியாக 100 கன அடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதால் நேரடி பாசனம் மூலம் 110.580 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது. அணையின் மூலம் மொத்தம் 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு 19 ஏரிகள் மூலம் மற்றும் நேரடி பாசனமாகவும் 8,367 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என கூறப்பட்டுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘மேகதாது அணை தொடர்பாக உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடரப்பட்டுள் ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது. மேகதாது அணையை கட்டக்கூடாது என்று பிரதமரை நேரில் சந்தித்தபோது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக தெரிவித்தார். இந்த அணை பிரச்சினை தொடர்பாக விரைவில் தொடங்க உள்ள சட்டப்பேரவை கூட்டத் தொடர் முடிந்ததும் டெல்லிக்குச் சென்று ஜல் சக்தி துறை அமைச் சரை சந்தித்து பேச உள்ளேன்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்