தி.மலையில் 3 நாட்களுக்கு காய்கறி அங்காடிகள் மூடல் :

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலையில் காய்கறி அங்காடிகளை 3 நாட்களுக்கு மூடுவதாக வியாபாரிகள் அறிவித் துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட் டத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்ததால், கடலை கடை சந்திப்பில் செயல்பட்டு வந்த காய்கறி அங்காடி கடந்த மாதம் இடம் மாற்றம் செய்யப்பட்டது. திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே உள்ள ஈசான்ய மைதானத்திலும் மற்றும் திருக்கோவிலூர் சாலையில் உள்ள காலி இடத்திலும் காய்கறி கடைகள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டது.

அந்த 2 இடங்களிலும் திறந்த வெளி பகுதியாக இருந்ததால், வெயிலில் காய்கறிகள் வதங்கி போவதால், கொட்டகை அமைத்துக் கொடுக்க வியாபாரிகள் வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கை ஏற்கப்படாததால், தங்களது பழைய இடத்திலேயே காய்கறிகள் விற்பனையை மீண்டும் தொடங்கினர்.

இந்நிலையில் காய்கறி அங்காடியை ஆட்சியர் பா.முருகேஷ் நேற்று முன்தினம் ஆய்வு செய்தார். அப்போது, இடநெருக்கடியால் காய்கறி அங்காடி செயல்படுவதை அறிந்து, அதற்கு தீர்வுகாண நகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தியை கேட்டுக்கொண்டார். அதன்படி, வியாபாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து, காய்கறி அங் காடியை 3 நாட்களுக்கு மூடுவதாக வியாபாரிகள் அறிவித்தனர். அதன்பேரில், நேற்று காய்கறி அங்காடிகள் மூடப்பட்டன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறும்போது, “திறந்தவெளியில் காய்கறி வைத்து வியாபாரம் செய்ய முடியாது. வெயிலில் காய்கறிகள் வதங்கி போகிறது. இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும், இரண்டு இடங்களிலும் அடிப்படை வசதிகள் இல்லை. எங்களது கோரிக்கையை நிறைவேற்றி கொடுக்க நகராட்சி நிர்வாகம் முன்வரவில்லை. 2 கோரிக்கைகளும் நிறைவேற்றி கொடுத்தால், அவர்கள் தெரி விக்கும் இடத்தில் காய்கறி கடைகளை அமைப்போம். இதை யொட்டி இன்று (நேற்று) முதல் மூன்று நாட்களுக்கு காய்கறி அங்காடியை மூடியுள்ளோம்” என்றனர்.

இது தொடர்பாக நகராட்சி ஆணையாளர் கிருஷ்ண மூர்த்தியை தொடர்பு கொண்டு கேட்டபோது, “திருவண்ணாமலை நகராட்சி நிதி நெருக்கடியில் உள்ளது. கரோனா தொற்று காலமாக உள்ளதால் வரி வசூலிக்கும் பணியும் தடை பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். விரை வில் தீர்வு காணப்படும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்