குமாரபாளையம் வேதாந்த மடத்தின் நிலங்கள் அனைத்தும் நில அளவை செய்யப்பட்டு ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும், என திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
குமாரபாளையம் வேதாந்த மடத்திற்கு சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு குறித்து திருத்தொண்டர்கள் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் மற்றும் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கடந்த 20 ஆண்டுகளாக கோயில் நிலங்கள் மீட்பது குறித்து அரசுத்துறை அதிகாரிகள் உதவியுடனும் மற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பள்ளிபாளையம் காசிவிஸ்வேஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 22 ஏக்கர் நிலங்கள் பார்வையிடப்பட்டது. அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு கோயில் நிலம் மீட்கப்படும். ஆவத்திபாளையம் பெருமாள் கோயில் ஆக்கிரமிப்பு குறித்து புகார் வந்துள்ளது. குமாரபாளையம் வேதாந்த மடத்தின் நிலங்கள் அனைத்தும் நில அளவை செய்யப்பட உள்ளது. ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு நிலம் மீட்கப்படும்.
இதேபோல் அப்புராயர் சத்திரத்திற்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்த 85 நபர்களுக்கு தகவல் அனுப்பப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். ஆக்கிரமிப்பாளர்கள் கோயிலுக்கு வாடகை செலுத்த முன்வந்தால் சட்டப்படி அங்கீகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago