நாமக்கல்லை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை : புதிய ஆட்சியர் ஸ்ரேயா சிங் தகவல்

நாமக்கல்லை கரோனா தொற்று மற்றும் கரோனா இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும், என புதிய மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங் தெரிவித்தார்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த கா.மெகராஜ், தமிழ்நாடு நகராட்சிகள் நிர்வாக அலுவலக இணைச்செயலாளராக பணயிட மாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஸ்ரேயா சிங் நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இவர் நேற்று நாமக்கல் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

சமீபத்தில் சென்னையில் புதிய ஆட்சியர்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின் 7 முக்கிய அறிவுரைகளை வழங்கியுள்ளார். அரசின் திட்டங்கள் மற்றும் சலுகைகள் அனைத்து மக்களுக்கும் சேரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவரது அறிவுரையின்பேரில் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

கரோனா தொற்று அதிகமாக உள்ள 11 மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டமும் ஒன்றாக உள்ளது. அதனால் மற்ற மாவட்டங்களை விட குறைவாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. இன்னும் ஓரிரு வாரங்களில், நாமக்கல்லை கரோனா தொற்று இல்லாத மாவட்டமாகவும், கரோனா இறப்பு இல்லாத மாவட்டமாக மாற்றவும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிந்து அரசின் கட்டுப்பாடுகளை முறையாக பின்பற்றினால், கரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்தி, அடுத்த அலை வராமல் தடுக்க முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய ஆட்சியர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். பி.டெக் (இசிஇ) பட்டம் பெற்றுள்ளா். கடந்த 2013-ம் ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். கன்னியாகுமரி மாவட்டத்தில் பயிற்சி ஆட்சியர், பத்மநாபபுரத்தில் துணை ஆட்சியர், சென்னையில் தமிழக அரசின் உள்துறையில் துணை செயலாளர், திருநெல்வேலி மாவட்டத்தில் ஒழுங்குமுறை ஆணையராக பணிபுரிந்தார். இவர் நாமக்கல் மாவட்டத்தின் 3-வது பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE