அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார் - சசிகலாவின் கனவு ஒருபோதும் நனவாகாது : முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மீண்டும் பேச்சு

By செய்திப்பிரிவு

அதிமுகவை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற சசிகலாவின் கனவு ஒருபோதும் நனவாகாது என்று விழுப்புரத்தில் நடந்த அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.

விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று விழுப்புரம் கட்சி அலுவலகத்தில் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் கண்ணன் தலைமையேற்றார்.

இக் கூட்டத்தில் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சி.வி.சண்முகம் பேசியதாவது

சசிகலா யார், யாருக்கோ தொலைபேசியில் பேசி நாடகம் ஆடி வருகிறார். அதிமுகவுக்கும் சசிகலாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று உச்சநீதிமன்றம் வரை சென்று தெள்ளத்தெளிவாக தெரியப்படுத்தப்பட்டுள்ளது. ஆடின கையும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பதைப் போல மீண்டும் எப்படியாவது அதிமுகவை கைப்பற்றி விட வேண்டும் என்று சசிகலா கனவு காண்கிறார். அவரது கனவு ஒருபோதும் நனவாகாது.

சசிகலா குடும்பம் அடித்த கொள்ளையால்தான் வீண் பழியை ஏற்றுக்கொண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிறைக்கு சென்றார். அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலாவிற்கு அதிமுகவை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும், தார்மீக உரிமையும் கிடையாது.

இன்றைக்கு நமக்கு எதிரி திமுக மட்டுமல்ல,துரோகிகளை இனம் கண்டுகொண்டு இயக்கத்தை ஜாக்கிரதையாக நடத்த வேண்டும். சசிகலா குடும்பத்தை எந்த காலத்திலும் நெருங்க விடக்கூடாது. தலைமை கழகத்தினால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை விழுப்புரம் மாவட்ட அதிமுக ஏற்றுக்கொண்டு வரவேற்கிறது என்று பேசினார்.

இக்கூட்டத்தில் எம்எல்ஏக்கள் சக்கரபாணி, அர்ஜூணன், முன்னாள் எம்எல்ஏ முத்தமிழ்செல்வன், ஒன்றிய செயலாளர்கள் ராமதாஸ், விநாயகமூர்த்தி, பன்னீர், கோவிந்தசாமி, கண்ணன், ராஜா, மாவட்ட ஜெயலலிதா பேரவை தலைவர் வண்டிமேடு ராமதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்