கரோனா தொற்று குறைந்து வருவதால் - வேலூர் கோட்டைக்கு பொதுமக்கள் செல்ல விரைவில் அனுமதி :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று குறைந்து வருவதால் வேலூர் கோட்டையில் பொதுமக்கள் செல்ல அடுத்த வாரம் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா பரவல் அச்சம் காரணமாக சுற்றுலாத் தலங்கள் கடந்த ஏப்ரல் 16-ம் தேதி முதல் மூடப்பட்டது. அதன்படி, மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டையில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கோட்டையில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலில் மட்டும் ஆகம விதிப்படி தினசரி பூஜைகள் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், சித்திரை மாதம் பிரம்மோற்சவ விழாவும் கொடி ஏற்றமும் நடைபெறாமல் நிறுத்தப்பட்டது.

மேலும், கோட்டை வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகம், தேவாலயத்துக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு நுழைவு வாயில் அருகே இரும்பு தடுப்புகளை வைத்து மூடினர். மேலும், கோட்டையில் நடைபயிற்சி செல்ல தடை விதிக்கப்பட்டது.

தற்போது, ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு வரும் நிலையில், கோட்டையின் முன்பு உள்ள பூங்கா வில் மட்டும் நடைபயிற்சி செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கோட்டைக்குள் நடைபயிற்சி செல்ல எப்போது அனுமதி கிடைக்கும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பாக தொல்லியல் துறை அதிகாரிகள் தரப்பில் கூறும்போது, ‘‘மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் இன்னும் அனுமதி அளிக்கவில்லை. இதனால், வேலூர் கோட்டை திறக்கப்படாமல் உள்ளது. தற்போது, கரோனா தொற்று பரவல் குறைந்து வருவ தால் வரும் 21-ம் தேதிக்குப் பிறகு வேலூர் கோட்டை திறக்கப்பட வாய்ப்புள்ளது’’ என தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்