வேலூர் ரங்காபுரம்-பிரம்மபுரம் இடையே பாலாற்றில் - உயர்மட்ட பாலத்துடன் சாலை அமைக்க நிலஅளவீடு பணி :

By செய்திப்பிரிவு

வேலூர்-காட்பாடி இடையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் ரங்காபுரம்-பிரம்மபுரம் இடையே பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலத்துடன் இணைப்பு சாலை அமைப்பதற்கான நிலம் அளவீடு பணிகள் தொடங்கியுள்ளன.

வேலூர்-காட்பாடி இடையில் தினசரி ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் சத்துவாச்சாரியில் இருந்து காங்கேயநல்லூர் பகுதியை இணைக்கும் வகையில் சாலை ஏற்படுத்த வேண்டும் என்பதுடன் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை கிடப்பில் இருந்தது. இந்த இணைப்பு சாலை ஏற்படுத்தப்பட்டால் சுமார் 8 கி.மீ. தொலைவு சுற்றிச் செல்வது தவிர்க்கப்படும். நெரிசலும் ஓரளவுக்கு குறையும் என கூறப்பட்டது.

இதறகாக, கடந்த 2011-ம் ஆண்டில் திமுக ஆட்சிக் காலத்தில் நபார்டு கிராமச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7.50 கோடி மதிப்பில் பாலாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டு பின்னர் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், இதற்கு மாற்றாக சத்துவாச்சாரி ரங்காபுரத்தில் இருந்து பிரம்மபுரம் வரையிலான இணைப்புச் சாலையுடன் பாலாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டும் வகையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டிருந்த நிலையில், இதற்கான நில எடுப்புப் பணிக்காக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.22 கோடியே 53 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்பிறகு தேர்தல் பணிகள் தீவிரமடைந்ததால் இந்த உயர்மட்ட பாலத்துக்கான நிலம் எடுப்புப் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில், ரங்காபுரம்-பிரம்மபுரம் இடையே சாலை யுடன் கூடிய உயர்மட்ட பாலத்துக்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளன.

இதற்காக, வேலூர் வட்டாட்சியர் ரமேஷ் தலைமையில் கிராம நிர்வாக அதிகாரிகள், நில அளவையர்கள் கொண்ட குழுவினர் நிலங்களை அளவீடு செய்து குறியீடுகளை வரைந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்