மாநிலத்திற்கு மாநிலம் கல்விக் கொள்கையில் வேறுபாடு இருக்கும் போது நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள முடியாது, என இந்திய மருத்துவ சங்க மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய மருத்துவ சங்க தமிழக தலைவர் ராமகிருஷ்ணன், செயலாளர் பிரகாஷ் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேசிய அளவில் மருத்துவர்களுக்கு பணிப்பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக கொண்டுவர வேண்டும். வட மாநிலங்களில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. குறிப்பாக சமீபத்தில் அசாம் மாநிலத்தில் 20 பேர் கொண்ட கும்பல் மருத்துவர் ஒருவரை தாக்கியுள்ளது. மருத்துவமனைகள் பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி நாளை (18-ம் தேதி) மருத்துவர்கள் கருப்பு பேட்ச் அணிந்து பணிபுரிவர். இதனால் மருத்துவ சிகிச்சையில் எந்த பாதிப்பும் ஏற்படாது. எங்களது எதிர்ப்பை மட்டும் பதிவு செய்கிறோம். கடந்தாண்டு கரோனா நோய் தொற்றால் 747 மருத்துவர்கள் இறந்துள்ளனர். இந்த ஆண்டு 680 பேர் இறந்துள்ளனர். தமிழகத்தில் மட்டும் 35 பேர் இறந்துள்ளனர்.
தமிழக அரசு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதை வரவேற்கிறோம். மாநிலத்திற்கு மாநிலம் கல்விக் கொள்கையில் வேறுபாடு இருக்கும் போது நீட் தேர்வை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நீட் தேர்வை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர். பேட்டியின்போது இந்திய மருத்துவ சங்க நாமக்கல் மாவட்ட தலைவர் மருத்துவர் சதீஷ் உள்பட பலர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago