கரோனா 3-வது அலையை திறம்பட எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள செய்ய வேண்டிய முன்களப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்துப் பேசும்போது, ‘‘கரோனா 2-வது அலை படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. தற்போது, 3-வது அலையை கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ வல்லுநர்கள் அறி வுறுத்தியுள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 208 கிராம ஊராட்சிகளில் ஊராட்சி செயலாளர், செவிலியர், சத்துணவு அமைப்பாளர், அங்கன்வாடி பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், காவலர், தன்னார்வலர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் அதிகாரிகள் மற்றும் பேரூராட்சி செயலாளர்கள் தலைமையில் சுகாதார அலுவலர் மற்றும் ஆய்வாளர்கள், தன்னார்வலர்கள் என ஒவ்வொரு வார்டுக்கும் ஒரு குழு அமைக்க வேண்டும்.
ஆய்வுப்பணி
ஊரக மற்றும் நகரப் பகுதிகளில் இக்குழுவினர் தினசரி காலை 7.30 மணிக்கு கூடி தங்களது பகுதிகளில், தெருக்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் உள்ளனர்? தூய்மைப்பணிகள், சளி, காய்ச்சல் அறிகுறி உள்ளதா? தடுப்பூசி முகாம், காய்ச்சல் முகாம் நடத்துவது குறித்து ஏற்பாடு செய்ய வேண்டும். 100 வீடுகளுக்கு ஒரு நபர் என்ற அடிப்படையில் ஆய்வுப்பணிகளை தினந்தோறும் செய்ய வேண்டும்.ஆய்வுப்பணியில் தொய்வு ஏற்படக்கூடாது. ஆய்வு அறிக் கையை சம்பந்தப்பட்ட வட்டார மருத்துவ அலுவலர்கள், நகர சுகாதார மருத்துவர்களுக்கு அனுப்ப வேண்டும். அந்த அறிக்கையின் அடிப்படையில் தொற்று பாதிப்பு மற்றும் அதற்கான அறிகுறி உள்ளவர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் உடனடியாக மருத்துவப் பரிசோதனைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொள்ள வேண்டும்.
பாதிப்பு தன்மைக்கு ஏற்ப வீடுகளில் தனிமைப்படுத்துதல், சிறப்பு மையங்களில் சிகிச்சை அளித்தல் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்தல், காய்ச்சல் முகாம் நடத்துதல், தடுப்பூசி செலுத்துதல் குறித்த முடிவெடுத்து சிகிச்சை களை உடனுக்கு உடன் மேற் கொள்ள வேண்டும். சிகிச்சை விவரங்களை தினசரி கரோனா கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதை வரும் 20-ம் தேதிக்குள் தொடங்க வேண்டும். ஊராட்சி அளவில் உள்ள அரசு பள்ளிகளை தற்காலிக கரோனா கேர் சென்டராக மாற்றவேண்டும். அங்கு, நோயாளிகளுக்கு தேவை யான படுக்கைகள், கழிப்பறை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தயார் செய்ய வேண்டும். கரோனா 3-வது அலையை திறம்பட எதிர்கொள்ள அனைத்து அரசு அலுவலர்களும் ஒன்றிணைந்து, கரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை பணிகளில் பணியாற்ற வேண்டும். கரோனா தடுப்புப்பணிகளில் மருத்துவத் துறை மட்டுமே பொறுப்பேற்க முடியாது. அனைத்து துறைகளும் இணைந்து செயல்பட்டு பொது மக்களை கரோனா 3-வது அலையில் இருந்து பாதுகாக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி, மாவட்ட வருவாய் அலுவலர் தங்கைய்யாபாண்டியன், திட்ட இயக்குநர் மகேஷ்பாபு, மகளிர் திட்ட இயக்குநர் உமா மகேஷ்வரி, சார் ஆட்சியர் (பொறுப்பு) வில்சன் ராஜசேகர், மருத்துவப் பணிகள் இணை இயக்குநர் யாஸ்மீன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago