தோல் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரம் : தமிழக அரசுக்கு சிஐடியு தொழிற்சங்கம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

தோல் தொழிற்சாலைகளில் கழிவுநீர் தேங்கும் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும் என டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர் செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் ராமச்சந்திரன் கோரிக்கை வைத்துள்ளார்.

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட டேனரி மற்றும் ஷூ தயாரிப்பு தொழிலாளர் செங்கொடி சங்கம் (சிஐடியு) பொதுச் செயலாளர் எம்.பி.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் தேக்கி வைத்த கழிவு நீர் தொட்டியில் சட்டத்துக்கு புறம்பாக இறக்கியதால் ரமேஷ் என்பவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு டேனரி நிர்வாகம் தொழிற்சங்க சட்டங்களை மதிக்காத நடவடிக்கையும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மெத்தனப்போக்கும் காரணமாகிறது.

எனவே, விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் நிவாரணமும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளி களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். விபத்துக்கு காரணமான டேனரி நிர்வாகம் மற்றும் நிர்வாக அதிகாரிகள் மீதும் கண்காணிக்க தவறிய மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்கிட வேண்டும்.

எதிர்காலத்தில் இதுபோன்று உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்க கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்வதற்கு இயந்திரத்தை பயன்படுத்த வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தொழிற் சாலைகளில் அதிக அந்நிய செலாவணிகளை ஈட்டித்தரும் தொழிலான தோல் தொழிற்சாலைகளில் வெளியேறும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை தற்போதுள்ள நடைமுறையில் தமிழக அரசு எடுத்து நடத்திட வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்