சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் கரோனா நிவாரண நிதி - ரூ.2 ஆயிரம், மளிகைப் பொருட்கள் விநியோகம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கரோனா நிவாரண தொகையின் 2-வது தவணை மற்றும் மளிகைப்பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது.

கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தமிழக அரசு சார்பில் கரோனா நிவாரண நிதியாக, தலா ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அரிசி ரேஷன் கார்டுதாரர்களுக்கு கடந்த மே மாதம் கரோனா நிவாரண நிதியில் முதல் தவணை தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நிவாரண நிதியின் 2-வது தவணையுடன், ரேஷன் கார்டுதாரர்களுக்கு 14 வகை மளிகைப் பொருள் தொகுப்பு ஆகியவை வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் கன்னங்குறிச்சியில் உள்ள ரேஷன் கடை, சேலம் எம்டிஎஸ். நகரில் உள்ள பொன்னி ரேஷன் கடை ஆகியவற்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கரோனா நிவாரணத் தொகை மற்றும் மளிகைப்பொருட்கள் தொகுப்பு ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்பி., பார்த்திபன், சேலம் வடக்கு தொகுதி எம்எல்ஏ., ராஜேந்திரன் ஆகியோர் வழங்கி தொடங்கி வைத்தனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் செய்தியாளர்களிடம் கூறும்போது, சேலம் மாவட்டத்தில் உள்ள 1,591 ரேஷன் கடைகள் மூலம், 10 லட்சத்து 22 ஆயிரத்து 327 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண நிதி ரூ.204 கோடியே 46 லட்சத்து 54 ஆயிரம் மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பு வழங்கப்படுகிறது. இவற்றை முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து பெற்றுக் கொள்ளலாம், என்றார்.

நிகழ்ச்சிகளில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், சேலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுவர்த்தினி, மாவட்ட வழங்கல் அலுவலர் அமுதன், சேலம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை இணைப்பதிவாளர் மலர்விழி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நாமக்கல்லில் ரூ.106.08 கோடி

நாமக்கல் நகராட்சி முல்லை நகர் ரேஷன் கடையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்தார். நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம் முன்னிலை வகித்தார். சுற்றுலாத் துறை அமைச்சர் மா. மதிவேந்தன், கரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகை மளிகைப் பொருட்களை வழங்கினார்.

அப்போது அமைச்சர் பேசும்போது, நாமக்கல் மாவட்டத்தில் 882 ரேஷன் கடைகள் மூலம், 5 லட்சத்து 30 ஆயிரத்து 417 அரிசி கார்டுதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதி ரூ.106.08 கோடி மற்றும் 14 வகை அத்தியாவசிய மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.

நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கே.ஆர்.என்.ராஜேஷ்குமார், ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் கே.பி.ஜெகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஈரோட்டில் தொடக்கம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7.25 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணி நேற்று தொடங்கியது. வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, நிவாரணப் பொருட்களை வழங்கி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறும்போது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள 7.25 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.2000 வீதம் நிவாரணம் வழங்குவதற்காக ரூ.145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முகாமில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்ப அட்டைதாரர்கள் உட்பட அனைத்து அரிசி கார்டுதாரர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படவுள்ளது, என்றார்.

ஈரோடு வைராபாளையம், நாராயணவலசு, குமலன் குட்டை, பிராமண பெரிய அக்ரஹாரம் பகுதி ரேஷன் கடைகளில், ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ. திருமகன் ஈவெரா நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினை வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்