ராசிபுரம் அருகே கீரனூரில் நாமக்கல் மாவட்ட காவல் துறையினர் சோதனைச் சாவடி அமைத்து, அவ்வழியாக வந்து செல்லும் வாகனங்களில் இ-பாஸ் உள்ளதா என சோதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வழியாக வந்த கேரள மாநில பதிவெண் கொண்ட கார் ஒன்றை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது காரில் இருந்த 3 பேர் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்தனர். சந்தேகமடைந்த காவல் துறையினர் காரை சோதனையிட்டபோது 2 சாக்கு மூட்டைகளில் சுமார் 4 அடி நீளமும், 5 கிலோ எடையும் கொண்ட 2 மண்ணுளிப் பாம்புகள் இருந்தது தெரியவந்தது.
அவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும், காரில் வந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேல்முருகன் (49), ஆல்பின் (48), வில்பிரின் (36) ஆகிய 3 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இதில் மண்ணுளிப் பாம்பு வேலூர் மாவட்டத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து மண்ணுளிப்பாம்பு உள்பட அம்மூவரையும் நாமக்கல் மாவட்ட வனத்துறையினரிடம், போலீஸார் ஒப்படைத்தனர். அவர்களை கைது செய்த வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago