தென்காசி மாவட்டத்தில் கடனாநதி,ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால், 8,225 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.
தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழைக் காலம் தொடங்கியுள்ளதால், கார் சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ளனர். தமிழக முதல்வர் உத்தரவின்படி கடனாநதி, ராமநதி, கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து நேற்றுபாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. வரும் அக்டோபர் 31-ம் தேதிவரை 140 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.
கடனாநதி, ராமநதி அணைகளில் இருந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், திருநெல்வேலி தொகுதிமக்களவை உறுப்பினர் ஞானதிரவியம் ஆகியோர் தண்ணீரை திறந்துவைத்தனர். கருப்பாநதி, அடவிநயினார் அணைகளில் இருந்து தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார் தண்ணீர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் கூறும்போது, “தென்காசி வட்டம் ராமநதிபாசன திட்டத்தின் கீழுள்ள வடகால்,தென்கால் மற்றும் பாப்பன்கால் ஆகிய கால்வாயின் கீழ் பாசனம்பெறும் 1008.19 ஏக்கர் பாசன நிலங்களுக்கு கார் பருவ சாகுபடிக்கு ராமநதி நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 60 கனஅடி வீதம், மொத்தம் 168.03 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தேவைக்கு ஏற்ப தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் கடையம், மேலக்கடையம், கோவிந்தபேரி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், அயன்பொட்டல்புதூர், பொட்டல்புதூர், பாப்பான்குளம், ரவணசமுத்திரம் ஆகிய கிராமங்களின் விவசாயிகள் பயன்பெறுவார்கள்.
கடனா நதி நீர்த்தேக்கத்திலிருந்து 3987.57 ஏக்கர் பாசன பரப்புள்ள நேரடி பாசனத்துக்காக விநாடிக்கு 125 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர்திறந்து விடப்படுகிறது. இதன்மூலம் தென்காசி, அம்பாசமுத்திரம் வட்டங்களில் 12 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். கருப்பாநதி நீர்த்தேக்கத்திலிருந்து 1082.23 ஏக்கர் பாசன பரப்புள்ள நேரடி பாசனத்துக்காக விநாடிக்கு 25 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் கடையநல்லூர் வட்டத்தில் 7 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன்பெறுவார்கள். அடவிநயினார் அணையிலிருந்து 2147.47 ஏக்கர் பாசன பரப்புள்ள நேரடி பாசனத்துக்காக விநாடிக்கு 60 கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதன் மூலம் செங்கோட்டை, கடையநல்லூர் வட்டத்தில் 12 கிராமங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார்கள்.
நான்கு அணையிலிருந்தும் திறக்கப்பட்ட தண்ணீரால் மொத்தம் 8,225 ஏக்கர் நேரடி பாசன நிலங்கள் பயன்பெறும். எதிர்வரும் நாட்களில் தென்மேற்கு பருவ மழையினால் அணையில் நீர்வரத்து அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட பாசன நிலங்கள் முழுமைக்கும் பயன்பெறும் வகையில் சுழற்சி முறையில் நீர் வழங்கப்படும். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி சிறந்த முறையில் சாகுபடி செய்ய வேண்டும்” என்றார்.
செயற்பொறியாளர் (நீர்வளம்) மாரியப்பன், உதவி செயற்பொறியாளர் சங்கர்ராஜ், உதவி பொறியாளர் முருகேசன் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago