தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டில்குறித்த காலத்தில் தொடங்கியது. இருப்பினும் ஒரு சில இடங்களில் மட்டும் லேசான மழை பெய்தது.பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் முதல் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் அடிக்கடிமழை பெய்தது. இதனால் குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவியில் இரவில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
நேற்றும் காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் அடவிநயினார் அணையில் 23 மி.மீ. மழை பதிவானது. குண்டாறுஅணையில் 12 மி.மீ., தென்காசியில் 5.40 மி.மீ., ராமநதி அணை,கருப்பாநதி அணை, செங்கோட்டையில் தலா 4 மி.மீ., கடனாநதி அணை, சிவகிரியில் தலா 2 மி.மீ. மழை பதிவானது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. கரோனா பரவல்காரணமாக ஊரடங்கு உத்தரவுஅமலில் உள்ளதால், அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்கப்படவில்லை. இதனால் குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது.
குண்டாறு அணை தொடர்ந்து முழு கொள்ளளவில் உள்ளது. கடனாநதி அணை நீர்மட்டம் 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 66 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 60.37 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 92.50 அடியாகவும் இருந்தது.
நாகர்கோவில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. குறிப்பாக மலையோரப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.நேற்று காலை வரையில், அடையாமடையில் 17 மிமீ, கோழிப்போர்விளையில் 8, பாலமோரில் 16, முள்ளங்கினாவிளையில் 9, பெருஞ்சாணி மற்றும் புத்தன்அணையில் தலா 18, பேச்சிப்பாறை மற்றும் களியலில் தலா 15,குழித்துறையில் 13, சிற்றாறு ஒன்றில் 12 மற்றும் பூதப்பாண்டியில் 9 மிமீ மழை பெய்துள்ளது.
பேச்சிப்பாறை அணைக்கு 718 கனஅடி தண்ணீர் வருகிறது. நீர்மட்டம் 45 அடியாக உள்ளது. 514 கன அடி திறந்துவிடப்பட்டது. பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியாக உள்ளது. 592 கனஅடி தண்ணீர் வருகிறது. 700 கனஅடி வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 16.83 அடியாகவும், சிற்றாறு இரண்டின் நீர்மட்டம் 16.93 அடியாகவும், முக்கடல் அணையின் நீர்மட்டம் 25 அடியாகவும் உள்ளது.
நெல்லை அணைப்பகுதிகளில் மழை
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைப்பகுதிகளில் மழை நீடித்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரத்தில் பாபநாசம் அணையில் 5 மி.மீ., சேர்வலாறு அணையில் 3 மி.மீ., அம்பாசமுத்திரத்தில் 1 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.
143 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 131.45 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு1,835 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 1,204 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 83.40 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 303 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து 600 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 50 அடி உச்ச நீர்மட்டம் கொண்ட வடக்கு பச்சையாறு நீர்மட்டம் 35.20 அடியாக இருந்தது. அணையிலிருந்து 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): கொடுமுடியாறு- 28 அடி (52.25), சேர்வலாறு- 138.78 அடி (156). மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று பகலில் சாரல் மழை பெய்தது. வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago