டாஸ்மாக் மதுக் கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தங்களது வீடுகளின் முன் கோலமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு உட்பட கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள மாவட்டங்களை தவிர, பிற 27 மாவட்டங்களில் இன்று (ஜூன்14) முதல் மதுக்கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழகம் முழுவதும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவையில் பாஜக மாவட்ட தலைவர் நந்தகுமார் தலைமையில், துடியலூரில் உள்ள அவரது வீட்டின் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘டாஸ்மாக் கடைகளை நிரந்தமாக மூடு’ என வீட்டின் முன் கோலமிட்டு, சமூக இடைவெளியை பின்பற்றி பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல பாஜக மாநில, மாவட்ட நிர்வாகிகளும் தங்களது வீடுகளின் முன் கோலமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். வடவள்ளியில் உள்ள மண்டல பாஜக அலுவலகம் உள்ளிட்ட சில இடங்களில் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அடுத்த கோவில் பாளையம் காளியண்ணன்புதூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகி தனபாலகிருஷ்ணன், ஒன்றிய நிர்வாகி சுந்தரராஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக சார்பில், ஓடக்காட்டில் உள்ள மாவட்ட அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். பல்வேறு இடங்களில் கட்சியினர் தங்களது வீடுகள் முன் கோலமிட்டு எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
நீலகிரி மாவட்டத்திலும் பல்வேறு இடங்களில் பாஜகவினர் தங்கள் வீடுகளுக்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பாஜக நிர்வாகிகளுடன் குழந்தைகளும் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago