டாஸ்மாக் கடைகளை திறக்கும் திமுக அரசை கண்டித்து - வீட்டு வாசல்களில் கோலமிட்டு பாஜகவினர் எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் அதிகம் உள்ள நேரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் திமுக அரசை கண்டித்து, தி.மலை மாவட்டத்தில் பாஜக மகளிர் அணியினர் வீட்டு வாசல் முன்பு கோலமிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

கரோனா தொற்று பரவலை தடுக்க முழு ஊரடங்கு பிறப்பிக் கப்பட்டதால், தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக டாஸ்மாக் மது பானக் கடைகள் மூடப்பட்டன. இதற்கிடையில், ஊரடங்கில் தளர்வு அளித்து, டாஸ்மாக் மதுபானக் கடைகளை,ஜுன் 14-ம் தேதி (இன்று) முதல் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்படவுள்ளன.

டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் தமிழக அரசின் முடிவுக்கு பாஜக, அதிமுக மற்றும் பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுபானக் கடைகளை திறந்த தமிழக அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும் என பாஜக அறிவித்தது. இந்நிலையில், தி.மலை மாவட்டத்தில் உள்ள பாஜகவினர், டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து, வீட்டின் வாசலில் நேற்று கோலமிட்டுள்ளனர். "டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்காதே" என்ற வாசகத்தை எழுதி தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். மேலும், வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி உள்ளனர்.

இதுகுறித்து பாஜகவினர் கூறும்போது, “அதிமுக ஆட்சியில் கரோனா தொற்றின் தினசரி பாதிப்பு குறைவாக இருந்தபோது, டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட வேண்டும் என வலியுறுத்திய தற்போதைய முதல்வரும், அப்போதைய திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், கருப்பு சட்டை அணித்து முழக்கமிட்டார்.

ஆனால், திமுக ஆட்சியில் கரோனா தொற்று பரவல் மிக கடுமையாக உள்ள நேரத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மதுபானக் கடைகளை திறப்பது என்பது, கொடிய நோயின் தொற்று பரவலை அதிகரிக்க வழிவகுக்கும். எனவே, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கும் முடிவை திமுக அரசு கைவிட வேண்டும்” என்றனர்.

வேலூர்

தமிழகத்தில் பொது முடக்கம் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப் பட்ட நிலையில், கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வரும் 27 மாவட்டங்களில் மட்டும் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு, எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் அவரவர் வீடுகள் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் கிருஷ்ணாநகரில் பாஜக மாநில செயலர் கார்த்தியாயினி தனது குடும்பத்தினருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். காட்பாடியில் மாவட்ட துணைத்தலைவர் ஜெகன், சலவன் பேட்டையில் எஸ்.எல்.பாபு ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்