தமிழகத்தில் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். இவ்வாண்டு குறித்த காலத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், மழை தீவிரம் அடையவில்லை. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தென்மேற்கு பருவக்காற்றும் வேகமாக வீசுகிறது. நேற்றும் மதியம் வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியத்துக்கு மேல் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழை பெய்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி 24 மணி நேரத்தில் குண்டாறு அணை, அடவிநயினார் அணையில் தலா 3 மி.மீ., செங்கோட்டையில் 2 மி.மீ. மழை பதிவானது. மற்ற இடங்களில் மழைப் பதிவு இல்லை.
மழை தீவிரம் அடையாததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கவில்லை. கடனாநதி அணை நீர்மட்டம் 74 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 64 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 60.37 அடியாகவும், அடவிநயினார் அணை நீர்மட்டம் 89 அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை நீர்மட்டம் முழு கொள்ளளவில் உள்ளது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் தாராளமாக விழுந்தது. ஊரடங்கு உத்தரவு காரணமாக சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால், குற்றாலம் வெறிச்சோடி காணப்படுகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றாலம் அருவிகளில் குளிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago