கரோனாவால் தாய் அல்லது தந்தை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என சிவகங்கை தனியார் சிபிஎஸ்இ பள்ளி அறிவித்துள்ளது.
சிவகங்கை கண்டாங்கிப்பட்டி மவுண்ட் லிட்ரா ஜீ மேனிலைப் பள்ளியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் கற்பிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு இப்பள்ளியில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் குழந்தைகளுக்கு 50 சதவீத கட்டணமே வசூலிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கரோனா தொற்றால் தாய் அல்லது தந்தை அல்லது இருவரையும் இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க அப்பள்ளி முன்வந்துள்ளது.
இதுகுறித்து அப்பள்ளித் தலைவர் பால.கார்த்திகேயன் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா 2-வது அலை கடுமையான பாதிப்பை கட்டுப்படுத்த அரசு தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு ஶ்ரீ மீனாட்சி கல்வி மற்றும் அறக்கட்டளை சார்பில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் குழந்தைகளுக்கு 50 சதவீதம் கல்வி உதவித் தொகை வழங்கினோம்.
தற்போது கரோனாவால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான விண்ணப்பங்கள் எங்கள் பள்ளி அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன, என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago