ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் மற்றும் தி.மலை மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
தமிழகம் முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, ராணிப்பேட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சி.பஞ்சாட்சரம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மேல்விஷாரம் நகரத் தலைவர் அப்துல் சுக்கூர், ஆற்காடு மேற்கு ஒன்றியத் தலைவர் புஷ்பராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் விநாயகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் நிஷாத் அஹ்மத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, பெட்ரோல் பங்க்கில் வாகனங் களுக்கு பெட்ரோல் நிரப்ப வந்த பொதுமக்களிடம் அரசின் கலால் வரியாக ரூ.30 வீதம் 50 பேருக்கு வழங்கி நூதன முறையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரணாம்பட்டில் வேலூர் மத்திய மாவட்ட காங்கிரஸ் தலைவர் சுரேஷ் குமார் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி வர வேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவகிராணி, சமூக ஆர்வலர் நாட்டாம்கார் அக்பர் உள்ளிட்டோர் விளக்கவுரை ஆற்றினர். ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து முழக்கமிட்டனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்துக்கு திருப்பத்தூர் சட்டப்பேரவை தொகுதி பொறுப் பாளர் பரத் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பிரபு முன்னிலை வகித்தார். கட்சி நிர்வாகிகள் வெங்கடேசன், கணேஷ், நெடுமாறன், விஜயராகவன், சுரேஷ், மணி, லட்சுமணன், ஜமீல், ஒன்றியத் தலைவர் ஜாவித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல, வாணியம்பாடி பேருந்து நிலையம் அருகேயுள்ள பெட்ரோல் பங்க் முன்பாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மைப்பிரிவு மாநிலத் தலைவர் அஸ்லாம்பாட்ஷா தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் நேற்று கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பெட்ரோல், டீசல் விலையை திரும்ப பெறக்கோரி மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் முழக்கம் எழுப்பினர்.
திருவண்ணாமலை
தி.மலை மாவட்டம் சேத்துப்பட்டு நகரம் ஆரணி சாலையில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாநில செயலாளர் கோவிந்தராஜ் கண்டன உரையாற் றினார்.அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வை விமர்சிக்கும் வகையில் ஆட்டோவை மாடு கட்டி இழுத்து வந்தும், மாட்டு வண்டியில் இரு சக்கர வாகனத்தை ஏற்றியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருவதாகவும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து முழக்கமிட்டனர்.
இதில், மாவட்ட துணைத் தலைவர்கள் அன்பழகன், தசரதன் மற்றும் நகரத் தலைவர் ஜாபர் அலி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago