பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை, ஊரடங்கு விதிமீறல், பொதுமக்கள் மற்றும் மருத்துவமனைகளின் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றுதல் உள்ளிட்ட பணிகளை செய்யவும், கண்காணிக்கவும் 608 குழுக் கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையில், ஆட்சியர் வெங்கட பிரியா முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
இதுகுறித்து மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தது:
பெரம்பலூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்பை கண்டறிய 100 பேருக்கு ஒரு குழு அமைத்து, பரிசோதனை செய்து, தொற்று கண்டறியப்பட்டால், உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் இதுவரை 10,018 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு, அதில் 8,432 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது, 1,447 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 139 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், மருத்துவமனை கள் மற்றும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதி களை செய்யவும் கட்டளை கட்டுப்பாட்டு மையம்(வார் ரூம்) உருவாக்கப்பட்டு, 19 குழுக்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், 4 சிறப்பு கண் காணிப்புக்குழுக்கள், 22 சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவதை உறுதிசெய்யும் குழுக்கள், நகராட்சி பகுதிகளில் வார்டு அளவில் கண்காணிக்க 21 குழுக்கள், கிராம ஊராட்சி அளவில் 152 குழுக்கள், பேரூராட்சி பகுதிகளில் 60 குழுக்கள், பொதுமக்களுக்கு காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதை கண்காணிக்க 330 குழுக்கள் என மொத்தம் 608 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, அதில் 1,063 அலுவலர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆக்சிஜன் கொள்கலன் சோதனை ஓட்டம் முடிந்து, ஜூன் 12(நாளை) முதல் செயல்பாட்டுக்கு வரும். இம்மாவட்டத்தில் சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற விதிமுறைகளை பின்பற்றாத 9,751 பேருக்கு ரூ.22,07,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில், எஸ்.பி மணி, மாவட்ட வருவாய் அலுவலர் செ.ராஜேந்திரன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் டி.திருமால், சார் ஆட்சியர் ஜெ.இ.பத்மஜா, சுகாதார பணிகள் துணை இயக்குநர் கீதாராணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago