ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலை உயர்வு - மத்திய அரசின் அறிவிப்புக்கு விவசாயிகள் வரவேற்பு - எதிர்ப்பு :

By செய்திப்பிரிவு

ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்திய மத்திய அரசின் அறிவிப்பை விவசாயிகள் வரவேற்றும், எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

ஒரு குவிண்டால் நெல்லுக்கான ஆதார விலை ரூ.72-ஆக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசின் அறிவிப்பை வரவேற்று உழவர் பேரவை சார்பில், தி.மலை மாவட்டம் செய்யாறு அடுத்த தவசி கிராமத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையம் முன்பு சூடம் ஏற்றி இனிப்பு வழங்கி விவசாயிகள் கொண்டாடினர்.

மாவட்டத் தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். அப்போது அவர் கூறும்போது, “தமிழகத்தில் 7.50 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து திருவண்ணாமலை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது. சொர்ணவாரி பட்டத்தில் 1.50 லட்சம் ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டத்தில் தஞ்சை மாவட்டம் முதலிடம் வகிக்கும். தற்போது, தி.மலை மாவட்டம் முதலிடம் வகிக்கிறது.

இந்நிலையில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.72-ஆக உயர்த்தி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் குறைந்தபட்ச விலை ரூ.1,868-ல் இருந்து ரூ.1,940-ஆக கிடைக்கும். மேலும், தமிழக அரசின் ஊக்கத் தொகை ரூ.70 வழங்குவதால், ஒரு குவிண்டால் நெல் ரூ.2,010 என கிடைக்கும். மத்திய அரசின் ஆதார விலை உயர்வை வரவேற்று இனிப்பு வழங்கியுள்ளோம்.

நடப்பு நவரை பருவத்தில், தி.மலை மாவட்டத்தில் 61 நேரடி நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுள்ளதால், 90,000 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். சொர்ணவாரி பருவத்தில் அதி களவு நெல் சாகுபடி செய்யப் பட்டுள்ளதால், தி.மலை மாவட் டத்தில் 120 நேரடி நெல் கொள்முதல்நிலையங்கள் திறந்து சுமார் 2 லட்சம் டன் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். அப்போதுதான், மத்திய அரசு அறிவித்துள்ள ஆதார விலை உயர்வு, விவசாயிகளுக்கு கிடைக்கும்.

50 கிலோ டிஏபி உரம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ரூ.1,711 என விற்பனை செய்யப்பட்டது. அப்போது மானியமாக மத்திய அரசு ரூ.511 வழங்கியது. நாங்கள் ரூ.1,200 செலுத்தி டிஏபி உர மூட்டையை வாங்கினோம். இந்நிலையில், மத்திய அரசு திடீரென டிஏபி உர மூட்டையின் விலையை ரூ.2,400-ஆக உயர்த்தியது. இதனால் விவசாயி கள் பாதிக்கப்பட்டுள்ளனர். டிஏபி உரம் விலையை குறைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில், டிஏபி உர மூட்டைக்கு மானியமாக மத்திய அரசு ரூ.1,200 வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதற்காக, ரூ.20 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், நாங்கள் ஏற்கெனவே பெற்ற விலையில், டிஏபி உர மூட்டையை பெறுவோம்” என்றார்.

யானை பசிக்கு சோளப்பொறி

தென் இந்திய கரும்பு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் ராஜ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காரீப் பருவத்துக்கு ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை ரூ.72-ஐ உயர்த்தி, ரூ.1,940 என மத்திய அரசு விலை நிர்ணயம் செய்துள்ளது. இது வழக்கமான நடைமுறைதான். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகாது.

விஷம் போல் ஏறி வரும் விலைவாசி உயர்வு, பயிர் சாகுபடி செலவுகள், உரம் மற்றும் உழவுக்கு தேவையான இடுபொருள் விலை உயர்வு, வேளாண் தொழிலாளர்கள் பற்றாக்குறை போன்றவற்றை கவனத்தில் கொள்ளாமல் பன்னாட்டு நிறுவனங்களுக்கு விவசாயிகளை அடிமைப்படுத்தும் 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறாமல், குறைந்த அளவில் நெல் விலையை உயர்த்தி இருப்பது வேதனை அளிக்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.

ஆட்சிக்கு வந்தால் வேளாண் விஞ்ஞானி சாமிநாதன் குழு பரிந்துரை செய்துள்ள உற்பத்தி செலவில் 50 சதவீதம் லாபம் என்ற அடிப்படையில் விலையை நிர்ணயம் செய்வோம், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியாக பாஜக அளித்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

விவசாயிகளின் வாக்கு வங்கியை பெறுவதற்காக பொய்யான வாக்குறுதியை கொடுத்து ஏமாற்றி விட்டது. மேலும், உழவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்துள்ளது. நெல்லுக்கான ஆதார விலை உயர்வை மறுபரிசீலனை செய்து ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். 72 ரூபாய் உயர்வு என்பது யானை பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போல் உள்ளது” என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்