கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் வெளியேறினால் அபராதம் : குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ளவர்கள் வெளியேறினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமாரபாளையம் அடுத்த குப்பாண்டபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட எம்ஜிஆர் நகரில் 20-க்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இதையடுத்து, எம்ஜிஆர் நகர் பகுதி கட்டுப்படுத்தப்பட்ட மண்டலமாக சுகாதாரத் துறை அறிவித்து அங்கு தொற்று தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கட்டுப்படுத்தப்பட்ட பகுதி என்பதால், அப்பகுதியில் உள்ள வர்கள் வெளியேறாமல் இருக்க எம்ஜிஆர் நகருக்கு செல்லும் பிரதான சாலை இரும்பு தடுப்புகள் கொண்டு அடைக்கப்பட்டது.

இந்நிலையில், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் பலர் தங்களது அன்றாட பணிகள் பாதிக்கப்படுவதாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கும் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என குற்றம் சாட்டினர்.

மேலும், எம்ஜிஆர் நகரையொட்டியுள்ள குமாரபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட பாரதி நகர் வழியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் வெளியே சென்று வந்தனர்.

இதனால், அதிர்ச்சியும், கரோனா பரவல் அச்சம் அடைந்த பாரதி நகர் மக்கள், தங்கள் பகுதி வழியாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வசிப்பவர்கள் வரமுடியாத வகையில் தடுப்புகள் அமைத்து பொதுப்பாதையை அடைத்தனர். இந்நடவடிக்கைக்கு எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து அங்கு சென்ற குமாரபாளையம் போலீஸார் மற்றும் வருவாய் துறையினர் இருதரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

மேலும், எம்ஜிஆர் நகர் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு பகுதியின் வழியாக இருசக்கர வாகனம் மட்டும் செல்லும் வகையில் தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு எம்ஜிஆர் நகர் பகுதி மக்கள் கலைந்து சென்றனர்.

இதனிடையே, ‘கட்டுப்படுத்தப்பட்ட பகுதி மக்கள் நகராட்சி பகுதியில் நுழைந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்’ என குமாரபாளையம் நகராட்சி நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்