கரோனா முழுமையாக குறையும் வரை - வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும் பணி தொடரும் : நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

கரோனா தொற்று முழுமையாக குறையும் வரை வீடு வீடாகச் சென்று கரோனா அறிகுறிகள் தொடர்பான கணக்கெடுக்கும் பணி தொடரும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கிராம ஊராட்சிகளில் மேற்கொள்ளப்படும் கரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக மண்டல அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியர் கா.மெகராஜ் பேசியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான கூடுதல் படுக்கைகள், ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், சித்த மருத்துவ கரோனா சிறப்பு சிகிச்சை மையம் மற்றும் கூடுதல் படுக்கை வசதிக்காக தனியார் மற்றும் அரசு கல்லூரிகளில் கரோனா சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாகச் சென்று சளி, இருமல், காய்ச்சல், உடல்வலி உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் உள்ளவர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதோடு, அறிகுறிகள் இருப்பவர்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளவர்கள் கண்டறிந்து மருத்துவச் சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தொற்றாளர்களை கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுக்கு களப்பணியில் ஏற்படும் இடையூறுகளை நீக்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளை மண்டல அலுவலர்கள் செய்ய வேண்டும்.

அதேவேளையில் கட்டுப்பாடு மண்டலங்களில் வீடுகளுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்குவதை உறுதி செய்திட வேண்டும். பரிசோதனையில் ஆக்சிஜன் அளவு 94-க்கு குறைவாக உள்ளவர்களின் பட்டியலைத் சுகாதாரத் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

வீட்டில் தனிமைப்படுத்தப் பட்டவர்கள் சுகாதாரத்துறை அறிவுரையின்படி வெளியில் சென்றால் நோய் பரவும் அபாயம் உள்ளதால் அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்வதை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.

தொற்று முழுமையாக குறையும் வரை வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி, கட்டுப்பாட்டு பகுதியில் கண்காணித்தல் ஆகியவற்றில் முழுமையாக கவனம் செலுத்தி தொற்றைக் குறைக்க மண்டல அலுவலர்கள் பணிபுரிய வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கோ.மலர்விழி, உதவி இயக்குநர் பொறுப்பு (ஊராட்சிகள்) க.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்