'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை நேரடி கள ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தெரிவித்தார்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களுக்கு தீர்வு காண்பது தொடர்பான அனைத்துத் துறை அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் தலைமை வகித்துப் பேசியதாவது:
உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் தொடர்புடைய துறை அலுவலகத்திற்கு இணையதளம் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் மனுக்களை நேரடி கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மனுக்களை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு கருணையுடன் பரிசீலித்து நடவடிக்கை எடுத்து மனுதாரர்களுக்கு பதிலளிக்க வேண்டும். தக்க காரணங்கள் இன்றி எந்தொரு மனுவையும் நிராகரிக்கக்கூடாது. மனுக்களுக்கு விரைவாகவும், முறையாகவும் தீர்வு கண்டு மாவட்ட நிர்வாகத்திற்கு நற்பெயர் ஈட்டித் தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கணினி இயக்குநர்களுக்கு இணைய வழியில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்களை எவ்வாறு கையாள்வது, பதிலளிப்பது, ஒரு அலுவலகத்திற்கு தொடர்பில்லாத மனுக்களை சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு எவ்வாறு மாற்றம் செய்வது என்பது குறித்து மாவட்ட மின் ஆளுமை மேலாளர் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் வி.ரமேஷ் மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago