கரும்பு விவசாயிகளின் பணத்தை வழங்க கூட்டுறவு வங்கிகளுக்கு உத்தரவிட வேண்டும் : தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் சர்க்கரை ஆலை நிர்வாகம், கரும்பு விவசாயிகளுக்கு அனுப்பிய தொகையை, கூட்டுறவு வங்கி நிர்வாகம் விவசாயிகளுக்கு உடனே வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஞானமூர்த்தி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளது:

2020-21-ம் ஆண்டுகளில் கடந்த பிப்.7-ம் தேதி வரை பெரம்பலூர் சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு, ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய தொகை ரூ.25 கோடி அண்மையில் கரும்பு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இந்தத் தொகையை விவசாயிகளுக்கு வழங்காமல் பல இடங்களில் கூட்டுறவு வங்கிகள் பிடித்து வைத்துள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் விளக்கம் கேட்டபோது, பணத்தை விவசாயிகளுக்கு வழங்கக் கோரி தங்களுக்கு தெளிவான உத்தரவு வரவில்லை என கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், அரசுக்கு கெட்டப் பெயர் ஏற்படுத்தும் நோக்கத்தில், சில கூட்டுறவு வங்கிகள் கரும்பு விவசாயிகளின் பணத்தைப் பிடித்து வைத்துள்ளன.

எனவே, கரும்பு பயிரிட்டு போதிய விலை கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள கரும்பு விவசாயிகள், சர்க்கரை ஆலைகளுக்கு வழங்கிய கரும்புக்கு அளிக்கப்பட்ட தொகையை கூட்டுறவு வங்கிகள் உடனே வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்