ஊரடங்கில் தளர்வால் வாகன போக்குவரத்து அதிகரிப்பு : கடைகள் திறக்கப்பட்ட நிலையில் வியாபாரம் மந்தம்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் திருநெல்வேலி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் நேற்று வாகன போக்குவரத்து அதிகரித்திருந்தது. கடைகள் திறக்கப்பட்டும் வியாபாரம் எதிர்பார்த்த அளவு இல்லை என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலையால் முழு ஊரடங்கு 2 வார காலத்துக்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தொற்று படிப்படியாக குறைந்து வருவதால், ஊரடங்கில் நேற்றுமுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை காய்கறி, மளிகை, இறைச்சி, பூ, பழங்கள், புத்தகங்கள், எழுது பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக் கடைகள், வாகன பழுது நீக்கும் கடைகள், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இக்கடைகள் திறக்கப்பட்டிருந்தன. வாகனங்கள் மூலமும் விற்பனை நீடித்தது.

பாளையங்கோட்டையில் பழைய காவலர் குடியிருப்பு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தையில் கடைகள் மீண்டும் நேற்றுமுதல் செயல்பட்டன. ஆனால், வியாபாரிகள் எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் இருக்கவில்லை. காய்கறிகள் விலை குறைந்திருந்தது. வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனை செய்யப்படுவதால், பொதுமக்கள் சந்தைக்கு வருவதை தவிர்ப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

ஆட்டோ, கார்கள் இ.பதிவுடன் இயக்கப்பட்டன. ஆனால், போதுமான சவாரி கிடைக்கவில்லை என்று ஓட்டுநர்கள் தெரிவித்தனர். இருசக்கர வாகனங்கள் அதிகளவில் இயங்கின. திருநெல்வேலியில் நேற்றுகாலை 9 மணிக்கு வழக்கமான வாகன நெரிசல் முக்கிய சாலைகளில் காணப்பட்டது.

தென்காசி

தென்காசி, செங்கோட்டை, புளியங்குடி, கடையநல்லூர், சங்கரன்கோவில் நகராட்சி பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இருப்பினும் வியாபாரம் விறுவிறுப்பில்லை என்று,வியாபாரிகள் தெரிவித்தனர். அரசு அலுவலகங்கள் 30 சதவீத ஊழியர்களுடன் இயங்கின.

கன்னியாகுமரி

குமரி மாவட்டத்தில் மளிகைக் கடைகள், காய்கறி கடைகள் நேற்று காலை 6 மணிக்கே திறக்கப்பட்டன. கடையைத் திறந்தது முதல் பொருட்கள் வாங்க மக்கள் குவிந்தனர். நாகர்கோவில், மார்த்தாண்டம், குளச்சல், தக்கலை, கன்னியாகுமரி, திங்கள்நகர், குலசேகரம், களியக்காவிளை, கருங்கல், ஆரல்வாய்மொழி உட்பட முக்கிய பகுதிகளில் கடைவீதிகளில் வழக்கத்தை விட மக்கள் நடமாட்டம் அதிகமாக இருந்தது. வாகனப் போக்குவரத்தும் அதிகரித்தது. உள்ளாட்சி நிர்வாகத்தினர் மற்றும் சுகாதாரத்துறையினர் கரோனா ஊரடங்கு விதிமுறைகள் கடைகளில் முறையாக பின்பற்றப்படுகிறதா? என்பதை கண்காணிக்க ரோந்து சென்றனர். நாகர்கோவிலில் சில கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் தனியாக செயல்படும் காய்கறி, மளிகை கடைகள், மீன், இறைச்சி விற்பனை கடைகள், மின் பொருட்கள், ஹார்டுவேர், வாகன உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடைகள், வாகனம் பழுதுநீக்கும் கடைகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. காய்கறி சந்தைகளும் செயல்பட்டன.

அதேநேரம் அனுமதி அளிக்கப்படாத செருப்புக் கடைகள், ஜெராக்ஸ் கடைகள்,பிளாஸ்டிக் பொருள் கடைகள், செல்போன் கடைகள் போன்றவை ஆங்காங்கே திறந்திருந்தன. காவல் துறையினர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் இக்கடைகளை மூடுமாறு அறிவுறுத்தினர்.

இருப்பினும் பிரதான சாலைகளை தவிர்த்து உட்புறப் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டிருந்தன. ஆட்டோ, டாக்ஸி, வேன் போன்ற வாடகை வாகனங்கள் பெருமளவில் இயங்கின. சொந்த வாகனங்களான கார்கள், இருசக்கர வாகனங்கள் சாலைகளில் அதிகளவில் பயணித்தன. இதனால் அனைத்து சாலைகளிலும் வாகன போக்குவரத்து வழக்கம் போல் காணப்பட்டது. பேருந்துகள் மட்டுமே இயங்கவில்லை. காவல் துறையினர் ஆங்காங்கே தடுப்புகளை அமைத்து வாகனங்களை தடுத்து நிறுத்தினாலும், வாகனங்களில் வந்தவர்கள் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லிவிட்டு சென்றனர். இதனால் வாகன போக்குவரத்தை தடுக்க முடியாமல் போலீஸார் திண்டாடினர். மாவட்டம் முழுவதும் இதுபோன்ற நிலை காணப்பட்டது. இதேநிலை நீடித்தால் மீண்டும் கரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் நேற்று காலை முதல் காய்கறி சந்தைகள், மளிகை கடைகள் மற்றும் வங்கிகளில் மக்கள் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சாலைகளில் மோட்டார் சைக்கிள்கள் அதிகம் உலா வந்தன. இதனால் மீண்டும் தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தொற்று எண்ணிக்கை 100-க்கும் கீழ் குறைந்த பின்னர் தளர்வுகள் அளித்திருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

ஊரடங்கு தளர்வுகளை மீறி திறக்கப்பட்ட 50 கடைகள் மூடல்

கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகளை மீறி பல கடைகள் திறந்திருப்பதாக நகராட்சி ஆணையாளருக்கு தகவல் வந்தது. ஆணையாளர் ராஜாராம் உத்தரவின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் சுரேஷ், வள்ளிராஜ் மற்றும் அதிகாரிகள் நகரப் பகுதிகளில் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, மெயின் ரோடு, ஏ.கே.எஸ்., தியேட்டர் ரோடு, கிருஷ்ணன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த பாத்திரக் கடைகள், செல்போன் ரீசார்ஜ் கடைகள், பேன்சி ஸ்டோர், நகைக்கடைகள், ஜவுளிக்கடை, சலூன் கடைகள் உள்ளிட்ட 50 கடைகளை மூட உத்தரவிட்டனர்.

மேலும், 16 கடைகளில் முகக்கவசம் அணியாமல் இருந்த 29 பேரிடம் இருந்து தலா ரூ.200 வீதம், ரூ.5,800 அபராதம் வசூலிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE