கடை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என செய்யாறில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடந்த 2 வாரங்களாக முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அத்தியாவசிய கடைகள் உட்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசு அறிவித்துள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று (7-ம் தேதி) முதல் அமலுக்கு வந்துள்ளது. சுகாதாரத் துறையின் வழிகாட்டி நெறிமுறைகளுடன் கடைகளை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி, செய்யாறு கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கோட்டாட்சியர் விஜயராஜ் தலைமை வகித்தார்.
கூட்டத்தில், “கரோனா தொற்று பரவலை தடுக்க, சுகாதாரத் துறை தெரிவித்துள்ள வழிகாட்டி நெறிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உரிமையாளர், தொழிலாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கடை உரிமையாளர் மற்றும் தொழிலாளர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.
கடையில் வாடிக்கை யாளர்கள் கூட்டமாக இருக்கக் கூடாது. தனி மனித இடை வெளியை கடைபிடித்து பொருட்கள் வாங்கிச் செல்வதை உறுதி செய்ய வேண்டும்” என அறிவுறுத்தப்பட்டது.
இதில், வட்டாட்சியர் திருமலை, காவல் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் வணிகர்கள், காய்கறி மற்றும் பழ வியாபாரிகள், மளிகை வியாபாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago