வேலூரில் மாநகராட்சி தூய்மைப் பணியாளரை தாக்கிய பெண் வியாபாரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி 30-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாநகராட்சியில் கரோனா ஊரடங்கு கட்டுப்பாடு களின்படி காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தால் மண்டித் தெருவில் மட்டும் பழக்கடை வியாபாரம் நடைபெற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, பழக்கடை வியாபாரி களுக்கு மட்டும் அடையாள அட்டை வழங்கப்பட்டு சமூக இடைவெளியுடன் கடைகளை அமைத்து வியாபாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், சில தள்ளுவண்டி வியாபாரிகள் இடைவெளி இல்லாமல் கடைகளை வைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, வேலூர் மாநகராட்சி இரண்டாவது மண்டல சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை பழ வியாபாரிகளை எச்சரித்து அறிவுரை வழங்கிவிட்டு சிறிது தொலைவு நடந்து சென்றார். அப்போது, ஒரு பழ வியாபாரியான கீதா என்பவர், சுகாதார ஆய்வாளர் ஈஸ்வரனை தகாத வார்த்தைகளால் தனியாக திட்டிக் கொண்டிருந்தார்.
இதை கவனித்த தூய்மைப் பணியாளர் சாந்தகுமாரி என்பவர், பழ வியாபாரி கீதாவிடம் சென்று ‘ஏன் அதிகாரிகளை திட்டுகிறாய்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், திடீரென தூய்மைப் பணியாளர் சாந்தகுமாரியை பழ வியாபாரி கீதா தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தகவலால் அதிர்ச்சி யடைந்த சக தூய்மைப் பணியாளர்கள் சுமார் 30-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு மீன் மார்க்கெட் அருகில் உள்ள அண்ணா சாலையில் குப்பை அகற்றும் தள்ளுவண்டி களுடன் மறியலில் ஈடுபட்டனர். இந்த தகவலை அடுத்து வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கவிதா, தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் கலையரசி ஆகியோர் விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தூய்மைப் பணியாளரை தாக்கிய பெண் மீது முறைப்படி புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர். இதனையேற்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால், அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago