தண்ணீர் பிரச்சினையை தீர்க்க கிணறு வெட்டி ஓராண்டாகியும் இதுவரை குடிநீர் விநியோகிக்க சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முன்வரவில்லை எனக் கூறி ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர்.
சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத் துக்குட்பட்ட தியாகராஜபுரத்தில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், கடந்த 2020 ஆண்டு தாய் திட்டத்தின் கீழ் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் திறந்த வெளி கிணறு வெட்டப்பட்டுள்ளது. ஆனால் அதிலிருந்து மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டி இணைப்புக் கொடுக்கப்படாததால், அப்பகுதி யில் வீடுகளுக்கு தண்ணீர் விநியோகிக் முடியாத சூழல் நிலவுகிறது. இந்நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் தியாகராஜபுரம் ஏரி வரத்து வாய்க்கால் பாசன ஆயக்கட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் கிணற்றில் மின் மோட்டார் அமைத்து குழாய் பொருத்தி தண்ணீர் விநியோகிக்கவும், கிராமத்தின் அனைத்து வடிகால்களிலும் தூர்வாரி கழிவு நீர் செல்வதை உறுதிப்படுத்த வேண்டுமென சங்கராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளனர்.
ஆனால் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சங்கத்தின் கோரிக்கையை கிடப்பில் போட்டுள்ளதாகவும், அதை நிறைவேற்றிட வேண்டும் என சங்கத்தின் தலைவர் க.திருப்பதி, வட்டார வளர்ச்சி அலுவலரிடம் நேரில் சென்று கடந்த ஏப்ரல் மாதம் வலியுறுத்தினர். அப்போது, தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அப்பணிகளை செய்ய இயலாது என வட்டார வளர்ச்சி அலுவலர் கூறியுள்ளார்.
இதையடுத்து நேற்று முன்தினம் மீண்டும் மனு அளித்து, தண்ணீர் பிரச்சினையை தீர்க்க முன்வரவேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இதோடு, ஆட்சியரிடமும் மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக சங்கராபுரம் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கேட்டபோது, தேர்தல் நேரத்தில் பணியிடமாற்றமாக இந்த அலுவலகத்திற்கு வந்திருப்பதாகவும், தற்போது அவர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருப்பதாகவும், விரைவில் மின்மோட்டார் பொருத்தி இணைப்பு கொடுக்கப்படும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago