கரோனா தொற்று பரவல் குறைந்த பின்னர் பிளஸ் 2 பொதுத்தேர்வு நடத்த வேண்டும், என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத் தலைவர் ஆ.ராமு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
கரோனா தொற்று பரவல் காரணமாக மத்திய அரசு சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து அறிவித்துள்ளது. அதேபோல் தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சூழலில் நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் அனைத்து மாவட்ட முதுகலை ஆசிரியர்களிடம் பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்துவதா, வேண்டாமா என்று கருத்து கேட்டிருந்தது.
இதில் பெரும்பாலான முதுகலை ஆசிரியர்கள், வைரஸ் தொற்று குறைந்த பிறகு நிச்சயமாக தேர்வு நடத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது பிளஸ் 2 படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் வகையில் தேர்வு மையங்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும். அதன் பிறகே பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும்.
கடந்த காலங்களில் ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் அமர்ந்து தேர்வு எழுதினர். இதனை ஒரு வகுப்பிற்கு 10 மாணவர்கள் என்ற வகையில் தேர்வு நடத்த வேண்டும். சுகாதாரத்துறையின் வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றி பிளஸ் 2 பொதுத் தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago