ஊரடங்கை மீறி ஏரியில் மீன்பிடிக்க திரண்ட மக்கள் :

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ள நக்கம்பாடி கிராமத்தில் பெரிய ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியில் உள்ள தண்ணீரை விவசாயிகள் தங்கள் விளைநிலங்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சம்பா சாகுபடி அறுவடை முடிந்த பிறகு, இந்த ஏரியில் தண்ணீர் குறைந்து விடும். இதையடுத்து, ஏரியில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக மீன்பிடி திருவிழாவுக்கு போலீஸார் அனுமதி தர மறுத்ததால், மீன்பிடிக்க மக்கள் முன்வரவில்லை.

இந்நிலையில், நிகழாண்டு கரோனா முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நக்கம்பாடி, சொக்கநாதபுரம், நமங்குணம், செந்துறை ஆகிய கிராமங்களைச் சேர்ந்த நூற் றுக்கும் மேற்பட்ட மக்கள் நேற்று ஒன்று திரண்டு ஏரியில் மீன்பிடிக்க இறங்கினர். இதையறிந்த கிராம நிர்வாக அலுவலர் மணிகண்டன், செந்துறை போலீஸாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாரைக் கண்டதும், மக்கள் மீன் பிடிப்பதை விட்டுவிட்டு, கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE