மறைந்த முன்னாள் முதல்வர் - கருணாநிதி பிறந்தநாள் விழா :

By செய்திப்பிரிவு

மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் பிறந்தநாள் விழா நேற்று பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

அரியலூர் மாவட்ட திமுக அலுவலகத்தில் உள்ள மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலைக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சரும், திமுக மாவட்டச் செயலாளருமான எஸ்.எஸ்.சிவசங்கர் நேற்று மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினார். அரியலூர் எம்எல்ஏ அலுவலகம் முன்பு கருணாநிதியின் படத்துக்கு எம்எல்ஏ கு.சின்னப்பா மாலை அணிவித்தார். அரியலூர் வித்யா மந்திர் பள்ளியில் வனத் துறை சார்பில் ஆட்சியர் த.ரத்னா மரக்கன்றுகளை நட்டார்.

பெரம்பலூரில் உள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதியின் படத்துக்கு திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி மலர் தூவி மரியாதை செலுத்தினார். பெரம்பலூர் எம்எல்ஏ எம்.பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் ஆட்சியர்  வெங்கடபிரியா மரக்கன்று நட்டார்.

கரூர் மாவட்டத்தில் உள்ள 3,19,816 ரேஷன் கார்டுதாரர்களுக்கு திமுக சார்பில் கரோனா நிவாரணமாக தலா 4 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை கோடங்கிப்பட்டியில் மின்துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, அவர் தொடங்கிவைத்த மரக்கன்று நடும் நிகழ்ச்சியில், எம்.பி செ.ஜோதிமணி, ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, எம்எல்ஏக்கள் இரா.மாணிக்கம், பி.ஆர்.இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, கரூர் கலைஞர் அறிவாலயத்தில் கருணாநிதியின் படத்துக்கு மாலை அணிவித்தார்.

புதுக்கோட்டையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகத்தில் உள்ள கருணாநிதியின் சிலைக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் எம்எல்ஏ வை.முத்துராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர். புதுக்கோட்டை மச்சுவாடியில் உள்ள வனத்துறை அலுவலக வளாகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன் மரக்கன்றுகளை நட்டார்.

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் எம்எல்ஏ அலுவலகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு எம்எல்ஏ எஸ்.கதிரவன் மலர் தூவி மரியாதை செலுத்தினார். ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். இந்த நிகழ்வுகளில் திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் காடுவெட்டி என்.தியாகராஜன் எம்எல்ஏ, மாவட்ட அவைத் தலைவர் அம்பிகாபதி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி, வனத்துறை சார்பில் திருச்சி நீதிமன்ற சாலையில் மரக்கன்றுகள் நடும் பணி நேற்று நடைபெற்றது. மண்டல வனப் பாதுகாவலர் ராமசுப்பிரமணியன் தலைமையில், மாவட்ட வன அலுவலர் சுஜாதா முன்னிலையில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

இதேபோல, திருச்சி அண்ணா அறிவியல் மைய கோளரங்க வளாகத்தில் கோளரங்க திட்ட இயக்குநர் ஆர்.அகிலன் மரக்கன்றுகள் நட்டார்.

திருவாரூரில் எம்எல்ஏ அலுவலகத்தில் நேற்று ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை எம்எல்ஏ பூண்டி கே.கலைவாணன் வழங்கினார்.

நாகை மாவட்டம் திருக்குவளையில் கருணாநிதி பிறந்த வீடு, அவர் படித்த அரசுப் பள்ளி, ஆரிபா தொழில்நுட்ப கல்லூரி ஆகிய இடங்களில் மாவட்ட வனத்துறை சார்பில் 1,000 மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. ஆட்சியர் பிரவீன் பி.நாயர் தலைமை வகித்தார். எம்.பி செல்வராஜ், எம்எல்ஏக்கள் நாகை மாலி, முகம்மது ஷா நவாஸ், எஸ்.பி ஓம் பிரகாஷ் மீனா, மாவட்ட வன அலுவலர் சி.கலாநிதி, திருக்குவளை ஊராட்சித் தலைவர் பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதேபோல, அனைத்து மாவட்டங்களிலும், கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு, திமுக சார்பில் அவரது சிலை, படங்களுக்கு மாலை அணிவித்து, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்