பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் - ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் நிறுவும் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், ரூ.35 லட்சம் செலவில் ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரம் நிறுவும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் பணிகள் நிறைவுபெற்று பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுதொடர்பாக, அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர்கள் தெரிவித்தது:

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனை 477 படுக்கை வசதிகளுடன் இயங்கி வருகிறது. இவற்றில், 10 ஏ வகை, 30 பி வகை, 6 சி வகை, 43 டி வகை ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் ஒரு ஆக்சிஜன் திரவ கொள்கலனுடன் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த மருத்துவமனையில் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் ஆகியவற்றின் சார்பில் ரூ.35 லட்சம் மதிப்பில் நிமிடத்துக்கு 1,000 லிட்டர் கொள்ளளவு ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இயந்திரம் புதிதாக நிறுவப்பட்டு வருகிறது.

தற்போது, கொள்கலன் பொருத்தும் பணி நிறைவு பெற்று, பிற ஆக்சிஜன் கொள்கலன்களுடன் இணைத்தல், குழாய் பொருத்துதல், தடையில்லா மின்சாரத்துக்காக கூடுதல் திறனுடன் கூடிய ஜெனரேட்டர் அமைத்தல், தனி மின் இணைப்பு வழங்குதல் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. கொள்கலனில் உள்ள ஆக்சிஜன் தீர்ந்தவுடன், தானாகவே பிற கொள்கலனிலிருந்து ஆக்சிஜனை வெளியேற்றுவதற்கான தானியங்கி இயந்திரமும் பொருத்தப்பட உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் நேரடியாக குழாய்கள் மூலம் சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு அனுப்பப்படும்.

மேலும், இயந்திரத்தை இயக்கும் முறை மற்றும் சிறு பழுதுகளை சரிசெய்யும் முறை குறித்து இங்குள்ள ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலன்களை தொடர்ந்து கண்காணித்து பராமரிக்க தனியாக பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள்.

இப்பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு, இன்னும் 2 நாட்களில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இதன் மூலம் பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும் என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்