கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 500 குடும்பங்களுக்கு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி சார்பில் தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட் களை மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் நேற்று வழங்கினார்.
திருப்பத்துார் தூய நெஞ்சக் கல்லூரி உள் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் செயலாளர் ஜான் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். கூடுதல் முதல்வர் மரிய ஆரோக்கியராஜ் முன்னிலை வகித்தார். முன்னதாக கல்லூரி முதல்வர் மரிய ஆண்டனிராஜ் வரவேற்றார்.
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கரோனா தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த 500 குடும்பத்தினருக்கு தலா ரூ.5 ஆயிரம் மதிப்பிலான மளிகைப்பொருட்கள், மருந்துகள் மற்றும் ஊட்டச்சத்து மிக்க உலர் உணவுப்பொருட்களை வழங்கினர்.
அப்போது மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதற்கிடையே, திருப்பத்தூர் மாவட்டத்துக்கு 6 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசியும், ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசியும் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளன. அதன்படி, விரைவில் தடுப்பூசி முகாம் தொடங்கும்’’ என்றார்.
இதைத்தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்டத்தில் பாரம்பரிய மருத்துவ முறையினை கையாண்டு சிறப்பாக மருத்துவ சேவையாற்றி வரும் அரசு சித்த மருத்துவர் வி.விக்ரம் குமாருக்கு “சிறந்த சமூக சேவகர் விருது” கல்லூரி சார்பில் வழங்கப்பட்டது.
இதில், கல்லுாரி பொருளாளர் சத்திய நாதன், தமிழ்த்துறை பேராசிரியர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago