மாற்று வழித்தடத்தை பரிந்துரைக்காமல் பழைய திட்டத்தின்படி - திருமங்கலம் - கொல்லம் நான்குவழிச் சாலையை அமைக்க முயற்சி : நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருமங்கலம்-கொல்லம் நான்குவழிச் சாலைத் திட்டத்தை மாற்று வழித்தடத்தில் அமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காமல், திட்டமிடப்பட்ட அதே பாதையில் செயல்படுத்த முயற்சிப்பதை கைவிட வேண்டும் என்று, தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, என்எச் 744 நஞ்சை மீட்பு மற்றும் சாலை மாற்று அமைப்பு சங்க நிர்வாகிகள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:

தற்போதுள்ள திருமங்கலம் - கொல்லம் சாலைக்கு பதிலாக நான்குவழிச் சாலை அமைக்க கடந்த 2018 நவம்பர் மாதம் நெடுஞ்சாலைத்துறையால் அறிவிப்பு வெளியிடப்பட்டது. புதிய பாதையானது விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி, மீனாட்சிபுரம், புத்தூர், தென்காசி மாவட்டம் சிவகிரி, வாசுதேவநல்லுர் மேற்கு, புளியங்குடி கிழக்கு, வடகரை வழியாக புளியரை செல்கிறது. புத்தூரில் இருந்து புளியரை வரை முழுமையாக விவசாய நிலமாக இருப்பதால் விவசாயிகள் எதிர்ப்பால் சாலை நில அளவைப் பணி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியரால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

கடந்த 2018 நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பு 2019 நவம்பர் மாதம் காலாவதியானது. புதிதாக அமைய உள்ள சாலை, விளைநிலங்கள் வழியாகவும், தற்போதுள்ள சாலையை விட அதிக தூரம் இருப்பதாலும், வன உயிரினங்கள் நடமாடும் பகுதி வழியாகச் செல்வதாலும், மாவட்ட தலைநகரான தென்காசி, சுற்றுலா தலமான குற்றாலத்தை இணைக்காமல் செல்வதாலும், மாற்றுப்பாதையில் அமைக்கக் கோரி, விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறுகட்ட போராட்டங்கள் நடத்தினர்.

இந்நிலையில், 2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அந்த திட்டத்தை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் மாற்றுச்சாலை கோரிக்கையை பரிந்துரை செய்யாமல், பழைய திட்டத்தின்படி தற்போது செயல்படுத்தி வருகின்றனர். இத்திட்டத்தை கைவிட்டு, மாற்று வழித்தடத்தில் சாலை அமைக்க பரிந்துரை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மனுவில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்