ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் - ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கைகள் தயார் : வரும் 4-ம் தேதி அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்

By செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 1,000 படுக்கை வசதிகளை வரும் வெள்ளிக்கிழமையன்று 3 அமைச்சர்கள் தொடங்கி வைக்க உள்ளனர்.

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங் களில் கரோனா தொற்று அதிகரித்து வருவதால் அரசு மருத்துவமனை களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளன. இதற்காக, தனியார் நிறுவனத்தின் உதவியுடன் தற்காலிக கூடாரங்கள் மற்றும் கட்டிடங்களில் ஆக்சிஜன் செறிவூட்டிகள், மின்விசிறி உள்ளிட்ட வசதிகளுடன் கூடிய படுக்கை வசதிகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250 படுக்கை வசதிகளுடன் கூடிய தற்காலிக சிகிச்சை மையம் அமைக்க உள்ளனர். இரண்டு தற்காலிக கூடாரங்கள் மற்றும் தற்காலிக கட்டிடம் ஒன்றில் அமைக்கப்பட்டு வரும் இந்தப் பணிகளை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று மாலை ஆய்வு செய்தார். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், வேலூர் சட்டப்பேரவை உறுப்பினர் கார்த்திகேயன், அரசு மருத்துவக் கல்லூரி டீன் செல்வி, சுகாதார பணிகள் துணை இயக்குநர் மணிவண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, ‘‘ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டம், மாவட்ட மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 1,000 படுக்கை வசதிகள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன.

இதனை, தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கைத்தறிதுறை அமைச்சர் காந்தி ஆகியோர் வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்க உள்ளனர்.

இந்த தற்காலிக சிகிச்சை மையங்கள் பயன்பாட்டுக்கு வந்தால் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளுக்கு தட்டுப்பாடு இருக்காது’’ என்று தெரிவித்தனர்.

திருப்பத்தூர்

வேலூர் மாவட்டத்தில் 250, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 400, திருப்பத்தூர் மாவட்டத்தில் 350 என ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் 1,000 கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. அதன்படி, திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பணிகளை அமைச்சர் ஆர்.காந்தி நேற்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம், அமைச்சர் ஆர்.காந்தி கூறும்போது, "திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள் சிகிச்சை பெற அரசு மருத் துவமனைகள் மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் கூடுதல் படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் 100 கூடுதல் படுக்கை வசதிகள், குழந்தைகள் மற்றும் தாய்-சேய் நலப்பிரிவின் 7 மாடி கட்டத்தில் 3 மற்றும் 4-வது மாடியில் 100 படுக்கைகள், மின்விசிறி வசதியுடன் அமைக்கப் பட்டு தயார் நிலையில் உள்ளன. இங்கு, ஓரிரு நாளில் ஆக்சிஜன் பொருத்தப்படும்.

அதேபோல, நாட்றாம்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுத லாக 50 படுக்கைகள் அமைக்கப் பட்டு நோயாளிகள் சிகிச்சை பெற தயார் நிலையில் உள்ளன. மேலும், வாணியம்பாடி அரசு மருத்துவ மனையில் 100 கூடுதல் படுக்கை வசதிகளுடன் தனியாக கூடாரம் அமைக்கப்பட்டு அங்கு மின்விசிறி கள், கழிப்பறை வசதிகள் அமைக் கும் பணிகள் நடந்து வருகின்றன. விரைவில், இதுவும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

ஆம்பூர் வர்த்தக மையத்தில் 100 படுக்கைகளுடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தயார் நிலையில் உள்ளது. இங்கு ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைக்கப்பட உள்ளன. திருப் பத்தூர் மாவட்டத்தில் வரும் 4-ம் தேதி (வெள்ளிக்கிழமை) 350 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் தயார் செய்யப்பட்டு நோயாளிகள் அனுமதிக்க நடவ டிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

அப்போது, மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார், மாவட்ட வருவாய் அலுவலர் தங்கய்யாபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி(திருப்பத்தூர்), அ.செ.வில்வநாதன் (ஆம்பூர்) தேவராஜ் (ஜோலார்பேட்டை), வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரிசுப்பிரமணி உட்பட பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்