மக்களை தேடிச் சென்று பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் தென்காசி மாவட்டத்தில் புதியமுயற்சியாக நடமாடும் காவல்தீர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை எஸ்பி சுகுணாசிங் தொடங்கி வைத்தார். செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தென்காசி மாவட்டத்தில் உள்ள 4 காவல் உட்கோட்டங்களுக்கும் தலா 2 வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்களில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 3 ஆண் காவலர்கள், 3 பெண் காவலர்கள் கொண்ட குழு பணியில் இருப்பார்கள்.
பிரச்சினைகளுக்கு தீர்வு
ஒவ்வொரு கிராமத்துக்கும் ஒரு நாள் வாகனத்தில் சென்று, அங்கு உள்ள பிரச்சினைகளை மக்களிடம் கேட்டறிந்து, அவற்றுக்கு உடனடியாக தீர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.தங்களை நாடி வரும் நடமாடும் காவல் தீர்வு மைய குழுவில் பொதுமக்கள் தங்களது பிரச்சினைகளை தெரிவிக்கலாம். வழக்கு தொடர வேண்டிய நிலைஇருந்தால் காவல்துறை ஆய்வாளர் அந்த கிராமத்துக்கு வரவழைக்கப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டு, பிரச்சினைக்கு தீர்வு ஏற்படுத்தப்படும்.
ஊரடங்கு விதிமுறையை மதித்து பொதுமக்கள் பலர் தங்கள்வீடுகளை விட்டு வெளியே வராமல்உள்ளனர். அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்கள்,காய்கறிகள், பால், மருந்துகள் கிடைக்கச் செய்வது காவல்துறையின் தலையாய கடமை.அத்தியாவசிய பொருட் களுக்கு தட்டுப்பாடு இருப்பது தெரியவந்தால் காவல்துறை வாகனங்கள் மூலம் உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.
வெளியே வர வேண்டாம்
மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குடும்பத்தலைவர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பது தெரியவந்தால் அவர்களது குடும்பத்துக்கு நடமாடும் காவல் தீர்வு மையம் மூலம் தேவையான உதவிகள் செய்யப்படும்.அவர்களது வீடுகளுக்கு பெண் காவலர்கள் சென்று, தேவையான அத்தியாவசியப் பொருட்களை தொண்டு நிறுவனங்கள் மூலம் இலவசமாக கிடைக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மக்களை நோக்கி காவல்துறை வருவதால் தேவையில்லாமல் மக்கள் வெளியே வர வேண்டாம். உங்கள் தேவைகள் எதுவாக இருந்தாலும் அரசுத்துறை மற்றும் காவல்துறை மூலம் நிவர்த்தி செய்யப்படும்.
தேவையின்றி வாகனங்களில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென்காசி மாவட்டத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 100 வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் ஒரு வாரம் கழித்து திருப்பி வழங்கப்படுகிறது. மீண்டும் தேவையின்றி சுற்றித் திரிந்தால் நீதிமன்றம் மூலமே வாகனங்களை திரும்பப் பெற முடியும்.
இவ்வாறு எஸ்பி கூறினார்.
பின்னர், நடமாடும் காவல் தீர்வுமையத்தில் உள்ள காவல்துறையினரிடம் எஸ்பி பேசும்போது, “இந்த திட்டம் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறு, சிறுபிரச்சினைகளுக்கு அந்த இடத்திலேயே தீர்வு காண வேண்டும். வழக்கு பதிவு செய்ய வேண்டிய நிலை இருந்தால் காவல் ஆய்வாளரிடம் தெரிவிக்க வேண்டும். காவல் ஆய்வாளர் உடனடியாகஅங்கு வந்து, சட்டரீதியான நடவடிக்கை எடுப்பார். ஒவ்வொரு நாளும் எத்தனை புகார்கள் பெறப்பட்டன, என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பவை குறித்து ஆய்வு செய்யப்படும். இதில் சிறப்பாக செயல்படுவோருக்கு விருது வழங்கி பாராட்டப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago